தமிழ்மணி

அனுமனின் சுய நியமனம்

சீதையைத் தேடி அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பது; இதுதான் அனுமனுக்கு அவனுடைய மன்னன் சுக்ரீவன் இட்ட பணி. தென் திசையில் வாலி மகன் அங்கதன் தலைமையில் தேடி வந்த குழுவில் அனுமனும் ஒருவன். அதுவும் ஒருமா

நியூ பன்வேல்

சீதையைத் தேடி அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பது; இதுதான் அனுமனுக்கு அவனுடைய மன்னன் சுக்ரீவன் இட்ட பணி. தென் திசையில் வாலி மகன் அங்கதன் தலைமையில் தேடி வந்த குழுவில் அனுமனும் ஒருவன். அதுவும் ஒருமாதக் கெடுவுக்குள் திரும்பிச் சென்று செய்தி சொல்ல வேண்டிய ஆணையுடன் வந்துள்ளான்.

ராவணனை முதன் முதலில், ஊர் தேடு படலத்தில், உறங்கிக் கொண்டிருக்கும்போது காண்கிறான். ""சீதையைச் சிறை எடுத்த அரக்கனைப் பார்த்த பிறகும் உயிரோடு விடுவதா? இவன் தலை பத்தையும் தகர்த்து என் ஆற்றலைக் காட்டுவேன். இந்த ஊரையும் அழிப்பேன்'' என்று கொதித்து எழுந்தான். ஆனால், உடனே ஒரு கணம் சிந்தித்ததும் தன்னைத் தடுத்து நிறுத்திக் கொண்டான்.

ராவணனைக் கொல்வது ராமபிரான் தனக்கிட்ட பணி அன்று; அதற்காக வரவில்லை. ஒரு காரியத்துக்காக வந்து, அதை விடுத்து இன்னொரு காரியத்தைச் செய்தால் அது அறிவுடையவன் செய்யும் காரியமன்று. பின்னால் இது பெரும் பிழையாக முடியும். இப்படி எண்ணித்தான் அனுமன் ராவணனைக் கண்டதும் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டான்.

"தேடுவதற்கும், செய்தி கொணர்வதற்குமாக வந்தேன்' என்று ராவணனைச் சந்திக்கும்போது அனுமனே கூறுகிறான்.

""நன்னுதல் தன்னைத் தேடி

நாற் பெருந்திசையும் போந்த மன்னரில்,

தென்பால் வந்த தானைக்கு மன்னன்,

வாலி தன்மகன், அவன்தன் தூதன் வந்தெனன்'' (917-82)

தனக்கு விதிக்கப்பட்ட பணியான தேடலையும் செய்தி சொல்லலையும் மீறி, தன்னைத் "தூதன்' என்று அறிவித்துக்கொண்டது சரியா? யார் அவனைத் தூதனாக நியமித்தது? ராமனோ, சுக்ரீவனோ, அங்கதனோ அப்படி அனுமனை நியமித்ததாகவோ, அனுப்பியதாகவோ சான்று எதுவும் இல்லை. அப்படி இருக்க, அனுமன் தன்னைத்தானே ராமன் சார்பாகத் தூதுவனாக சுய நியமனம் செய்துகொண்டது மேலும் ஒரு பிழை அல்லவா?

இங்கேதான் அனுமனின் அறிவாற்றலை நாம் உய்த்துணர முடிகிறது.

முதலில் அனுமன் இலங்கைக்குள் நுழைந்ததும், ராவணனைக் கண்டதும் கோபம் ஏற்பட "ஒன்று ஊக்கி ஒன்று இழைக்கும் பிழை' செய்யாது, தனக்கு இடப்பட்ட பணியான சீதையைக் கண்டுபிடிக்கும் வரை, வேறு பணியைச் செய்யாது விட்டான். அப்போது சீதை எங்கே இருக்கிறாள், என்ன நிலைமையில் இருக்கிறாள் என்று எதுவும் தெரியாது.

இப்போது நிலைமை வேறு; வந்த வேலையான சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாகிவிட்டது. அவள் நலமோடு இருக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டாகிவிட்டது. சீதையிடமிருந்து அடையாளச் செய்திகளையும், சூடாமணியையும் பெற்றாகிவிட்டது. அவனுக்கு இடப்பட்ட பணியை முடித்துவிட்டான். திரும்பிப் போய் செய்தியைச் சொல்ல வேண்டியதுதான் பாக்கி.

வந்த காரியம் முடிந்ததும், வந்த வழியே திரும்பிச் செல்லலாம்; ஆனால், அனுமன் தன்  தகுதிக்கு அது இழுக்கு } குறைவு என்று உணர்ந்தான்.

முதல் நாள் பின் மாலை - முன் இரவு நேரத்தில் இலங்கைக்குள் நுழைந்து ராவணன் முன்பு வந்ததும், இரண்டாம் முறையாக அதிலும், முகத்துக்கு நேராக அவனைப் பார்க்க நேர்ந்ததும் அனுமனின் எண்ண ஓட்டம் மாறுபடத் தொடங்கியது.

"உள்ளத்தில் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத் தம் முகங்களே விளம்பும்' என்பதை உணர்ந்தவன் அனுமன். ராவணனை இவன் வெல்லவும் முடியாது; இவனை ராவணன் வெல்லவும் முடியாது. ராவணனோடு இப்போது போரிட்டு மோதினால் காலம்தான் கழியும். சீதையோ ஒரு மாதக் கெடு விதித்துவிட்டாள். அதற்குள் ராமனிடம் சென்று செய்தி சொல்லி, படையுடன் வந்து சீதையை சிறை மீட்க வேண்டும். அதுவே இப்போது முக்கியமானது. எனவே, சண்டை போடத் தொடங்குவதைவிட, தூதனாக வந்ததாகக் காட்டிக்கொண்டு ராவணனிடம் கடைசியாக நல்லதை எடுத்துச் சொல்லிவிட்டுச் செல்வதே மேல் என்று ஒரு முடிவுக்கு வந்தான். தன்னைத் தானே தூதனாக நியமனம் செய்து கொண்டான்.

""என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்

தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்

அன்னவே காலங்கள் ஒழியும்; ஆதலான்

துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ?'' (914-62)

""ஆதலான் அமர்த் தொழில் அழகிற்று அன்று; அருந்

தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான்'' (915-65)

ஒரு வேலையாக வந்த இடத்து, அவ்வப்போது ஏற்படும் நிலைமைக்கு ஏற்ப, தலைவனுடைய குறிப்பு அறிந்தால்தான் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு சுயமாகச் சிந்தித்து முடிவெடுத்து மேற்கொண்டு காய்களை நகர்த்தும் அறிவு வேண்டும். வள்ளுவப் பெருந்தகை குறிப்பும்  (குறள் 701-குறிப்பறிதல்) அதுவே.

""கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து

எண்ணி உரைப்பான் தலை'' (குறள்-687-தூது)

தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்தில்கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன் என்கிறார் வள்ளுவர்.

அனுமனும் இப்படித்தான் காலமும் இடமும் கருதி, தன் முடிவை மாற்றி இலங்கையில் நடந்து கொண்டான். அதுவே அவன் அறிவாற்றலை நுண்மையாக நமக்கு உணர்த்தும். எனவே, "தூதன்' என அனுமன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது சரியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT