மகாபாரதம் இயற்றியருளிய வியாசர் தமிழர் அல்ல; வடபுலத்திலே பிறந்து அங்கேயே வாழ்ந்தவர் என்றுதான் அறிகிறோம். அவர், அந்தணரான பராசரருக்கும், பரதவ (மீனவ) குலத்தவளான மச்சகந்திக்கும் பிறந்தவர். மகாபாரதத்தை ஆராய்ந்த இந்திய, ஐரோப்பிய அறிஞர்களிலே எவரும் வியாசரைத் தமிழராக அறிவிக்கவில்லை. ஆனால், வடமொழியிலும், தமிழ் மொழியிலும் நிறை புலமை பெற்ற ஆராய்ச்சியாளரான மறைமலையடிகள், தாம் இயற்றிய "முற்காலத் தமிழ்ப் புலவோர்' என்ற நூலில், (பக்.114),
""பழந் தமிழ்க் குடிகளாகிய பரதர் வகுப்பிற் தோன்றிய
வியாசர் என்னுந்தமிழ் முனிவர்...''
என்று குறிப்பிடுகின்றார். வட புலத்திலுள்ள பரதர் குலம் வியாசருக்கும் முற்பட்ட காலத்தில் தமிழ் இனத்தைச் சார்ந்ததாக இருந்திருக்கக்கூடும் என்று அனுமானித்துக்கொண்டு, அந்தப் பரதர் குலத்தைச் சார்ந்த மச்சகந்திக்குப் பிறந்த காரணத்தால், வியாசரைத் தமிழராக மறைமலையடிகள் கருதினார் போலும்!
÷மைந்தனின் சாதியைத் தந்தை வழியில் ஆய்ந்து முடிவு செய்வதுதான் இந்துக்களின் வழக்கம். அப்படித்தான் பாண்டவர்களும் கெüரவர்களும் முடிவு செய்துகொண்டு, வியாசரை அந்தணோத்தமராகக் கருதினர் என்று மகாபாரதம் கூறுகின்றது. வியாசர் தமிழராக இருக்க முடியாது என்பதை மகாபாரதக் கதையை ஒருமுறை படித்து முடித்தாலே புரிந்துகொள்ள முடிகிறது. பாரதக் கதையின் போக்கும், பாத்திரப் படைப்பும் அதிலே மலிந்துள்ள கற்பனைகளும் வருணனைகளும் பெரும்பாலும் தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகளுக்குப் புறம்பானவை; தமிழருக்கேயுரிய "ஐந்திணை ஒழுக்கம்' அதிலே கடைப்பிடிக்கப்படவில்லை. ஆகவே, வியாசரைத் தமிழரல்லாத வடபுலத்தவராகக் கொள்வதுதான் முறையாகும்.
(ம.பொ.சி.யின் "வில்லிபாரதத்தில் தமிழுணர்ச்சி' நூலிலிருந்து...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.