சொல் தேடல் -24
முன்பெல்லாம் அறைக்கு வெளியே இருப்பவரைப் பெயர் சொல்லியோ கைதட்டியோ கூப்பிட்டனர். இன்று அதற்கும் ஒரு கருவி வந்துவிட்டது. இக்கருவியை அலுவலகங்களில் மேலதிகாரிகள் அறைக்கு வெளியே இருக்கும் பணியாளரை அழைக்கப் பயன்படுத்துகிறார்கள்
முன்பெல்லாம் அறைக்கு வெளியே இருப்பவரைப் பெயர் சொல்லியோ கைதட்டியோ கூப்பிட்டனர். இன்று அதற்கும் ஒரு கருவி வந்துவிட்டது. இக்கருவியை அலுவலகங்களில் மேலதிகாரிகள் அறைக்கு வெளியே இருக்கும் பணியாளரை அழைக்கப் பயன்படுத்துகிறார்கள். இது விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் அறைகளைக் கவனித்துக்கொள்ளும் பையனைக் கூப்பிடவும், அறை தாழிடப்பட்டிருக்கும்போது வெளியே இருப்பவர் உள்ளே இருப்பவரை அழைக்கவும் உதவுகிறது. தொலைக்காட்சியில் வினா-விடைப் போட்டியில் வினாவுக்கு விடை தெரிந்தவர்கள் முந்திக்கொண்டு இதனை அழுத்தி விடைகளைத் தெரிவிக்கிறார்கள். மேலைநாடுகளில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் பயன்பாட்டிற்காகக் குளியல் அறைகளில்கூட இதனை அமைத்திருக்கிறார்கள். இதன் பெயர் buzzer .
இயற்கையில்தான் எத்தனை வகை ஓசைகள்! "குக்கூ' என்னும் குயிலோசை! "ஓ' என்று ஓயாது எழும் அலையோசை! "சல சல' என்று ஓடும் சிற்றோடையின் சிரிப்போசை! ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம்தான். "சரிகமபதநி' என்னும் ஏழு பண்ணொலிகளை முறையே மயிலின் அகவல், காளையின் முழக்கம், ஆட்டின் கத்தல், அன்றிலின் கரையல், குயிலின் கூவல், குதிரையின் கனைப்பு, யானையின் பிளிறல் இவற்றையொட்டி நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர். இயற்கையின் ஒலியிலிருந்து இசையை உருவாக்கியதுபோல் இக்காலத்தில் சில எளிய பொருள்களையும் உருவாக்கியுள்ளனர். அவற்றுள் ஒன்றே இக்கருவியும். வண்டின் ஒலியை ஆங்கிலத்தில் buzz என்பர். அதுபோல் ஒலிக்கும் பொருளுக்கு buzz என்று பெயரிட்டுள்ளனர்.
இதனை ஒலிப்பான் என்று குறிக்கலாம் என்கிறார் டி.வி. கிருஷ்ணசாமி. மின்னொலி அழைப்பான் என்னலாம் என்பது மீனா கண்ணன் கருத்து. அழைப்பொலியன் அல்லது அழைப்பொலிக் கருவி என்று கூறலாம் என்கிறார் ப. இரா. இராச அம்சன். அழைப்பான் என்னும் சொல்லைத் தந்துள்ளனர் சி. இராமச்சந்திரன், வெ ஆனந்தகிருஷ்ணன், ராஜசிம்மன் ஆகியோர். இவை "காலிங் பெல்'லையும் குறிக்கும் பொதுச்சொற்கள். முரலொலி என்னும் சிறப்பான சொல்லைத் தந்துள்ளார் சந்திரா மனோகரன். கோ.மன்றவாணன் முரலி, முரலொலி, முரல்மணி ஒலிச்சிமிழ் என்பவற்றையும், என்.ஆர்.ஸத்யமூர்த்தி முரலி, இமிரி, கைம்மணி என்பவற்றையும், கா. மு. சிதம்பரம் முரலி, முரல்வி, முரல்ஈர்ப்பி என்பவற்றையும் பரிந்துரைத்துள்ளனர். ஒலிச்சிமிழ் கற்பனை கொஞ்சும் சொல். ஆனால், "பஸ்ஸரி'ன் தனித்தன்மையைக் காட்டவில்லை. இமிரி என்பது "இமிர்' என்னும் பகுதியிலிருந்து உருவான நல்ல தமிழாக்கம். ஆனால், சற்றுக் கடினமானது. எஞ்சியவற்றுள் முரலொலி, முரல்வி, முரலி என்பவையும் முரல் என்னும் வேரிலிருந்து உருவான நல்ல இலக்கியத் தகுதி நிறைந்த சொற்களே.
வண்டு எழுப்பும் ஒலியை முரல் (Buzz) என்று குறித்தல் மரபு. திருவரங்கம் ஒரு காலத்தில் சோலையின் நடுவே இருந்த அழகினை, "வண்டினம் முரலும் சோலை' என்று கொண்டாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். (திருமாலை-14) திருஞானசம்பந்தர் திருவாரூர் அடைந்த செய்தியை, "தேனொடு வண்டு முரலும் சோலை திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்' (திருஞான. பு.499) என்று குறிக்கிறார் தெய்வச் சேக்கிழார். வண்டு, யாழ் போன்றவற்றின் இனிய ஓசையைக் குறிக்கும் இச்சொல் அரிதாக ஆந்தையின் அலறலைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. "முள்ளின்மேல் முதுகூகை முரலும் சோலை திருக்கள்ளில்' என்பது திருஞானசம்பந்தரின் திருக்கள்ளில் பதிகப் பாடல் (119:1).
ஜோதிர்லதா கிரிஜா தமது புதினம் ஒன்றில் Buzzer என்பதற்கு முரல் என்று மொழியாக்கம் செய்திருப்பதைத் தெரிவித்து, அது சரிதானா? என்று வினவியிருந்தார். ""பொங்குவது பொங்கல் என்பதுபோல முரல்வது முரலாகும். நல்ல தமிழாக்கம். முரல்வி என்று சொல்வது தெளிவாக இருக்கும்'' என்று தெரிவித்தேன். அவரும் பெருந்தன்மையோடு ""சரி'' என்றார். அதன்பின் முரல் என்பதனோடு இகர வினைமுதல் விகுதியைச் சேர்த்து முரலி என்று குறிக்கலாம். இச்சொல், உருள்வது உருளி என்பதுபோல முரல்வது முரலி என்று காரணப்பெயராய் அமையும் என்று முடிவுசெய்தேன். நண்பர்கள் கருத்தினை அறிய இச்சொல்லைக் கொடுத்தபோது, முரலொலி என்பதைப் பலரும், முரல்வி என்பதைக் கா.மு. சிதம்பரமும், முரலி என்பதை மன்றவாணன், ஸத்யமூர்த்தி, கா.மு. சிதம்பரம் ஆகியோரும் தந்திருப்பது கண்டு மகிழ்ச்சி யடைந்தேன். இம்மூன்று சொற்களில், முரல் ஒலி தொகைச்சொல்; முரல்வியும் முரலியும் தனிச்சொல். முரல்வியைவிட முரலி இயல்பானது. முரலொலி என்பது ஆகுபெயராய் ஒலியை உண்டாக்கும் பொருளை உணர்த்தும். ஆகையால் Buzzer என்பதனை முரலி அல்லது முரலொலி எனலாம். அதிகாரியின் அழைப்பு அன்பான அழைப்பாக சற்றே ஒலிக்கும்போது வண்டொலியாகவும் ஆத்திர அழைப்பாக நெடிது ஒலிக்கும்போது ஆந்தையின் அலறலாகவும் கொள்ளலாம் அல்லவா?
Buzzer - முரலி அல்லது முரலொலி
அடுத்த வாரத்திற்குரிய சொல் : Icon(ஐகான்)