புகழாப் புகழ்ச்சி
'இயல்பான உண்மைக்கு உபசாரப் பொருள்கூட்டுவது அது இயல்பான உண்மையன்று' என்று சொல்வது போலாகும். செம்பரிதி ஒளிர்வது இயல்பான உண்மை.
'இயல்பான உண்மைக்கு உபசாரப் பொருள்கூட்டுவது அது இயல்பான உண்மையன்று' என்று சொல்வது போலாகும். செம்பரிதி ஒளிர்வது இயல்பான உண்மை. "செம்பரிதி ஒளி பெற்றான்' எனப் பாடுவது அதற்கு உபசாரப்பொருள் கூட்டுவது போலாகும். இதனால்தான் "செம்பரிதி ஒளிபெற்றான்... என்று எவரேகொல் உவத்தல் செய்வார்?' என்னும் கேள்வியை சாமிநாதையரை, அவர் மகாமகோ பாத்தியாயப் பதவி பெற்றதற்காக வாழ்த்துகையில் முன்வைக்கின்றார் மகாகவி பாரதி.
யாரும் செம்பரிதி ஒளி பெற்றதற்காக மகிழமாட்டார்கள் - வியப்புறமாட்டார்கள். செம்பரிதி இருள்பெற்றால்தான் வியப்பார்கள். பெறாது என்பது வேறு செய்தி. "செம்பரிதி ஒளிபெற்றான்; ஒளிபெற்றான்' என்று திரும்பத் திரும்பச் சொல்லுவது செம்பரிதியினின்று அதன் ஒளியைப் பிரிப்பது போலாகும்; பிரிக்கவே இயலாது என்பது வேறு செய்தி.
"தேனுக்குச் சுவையுண்டு' என்று திரும்பத் திரும்பச் சொல்லுவது வேப்பங்காய் இனித்தது என்பது போலாகிவிடும்; ஏனெனில், தேனுக்குச் சுவையன்றி கசப்பும் உண்டோ? இல்லை. உண்மையாயினும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும்.
"உம்பர்கள் (தேவர்கள்) இறவாமை அடைந்தனர்' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டக் கூடாது; இறவாமையே உம்பர்தம் இயல்பு. மகாமகோபாத்தியாயப் பதவியைப் பெறுதற்குரிய தகுதி சாமிநாதையரிடம் இயல்பாகவே இருந்திருக்கிறது; சூரியனிடம் ஒளியும், தேனிடம் சுவையும், உம்பர்களிடம் இறவாமையும் இயல்பாக இருப்பதுபோல. எனவே, இயல்பை வலியுறுத்தக்கூடாது. அது இயல்புக்கே ஊறு விளைவிப்பது போலாகிவிடும். பின் எது வியப்பு என்றால், சாமிநாதையருக்கு மகா மகோபாத்தியாயப் பதவி பரிவின் ஈயப்படாதிருந்தால் அதுதான் வியப்பாகும்; சூரியன் இருள் பெற்றால்தான், தேன் கசந்தால்தான், தேவர்கள் இறந்தால்தான் வியப்படையலாம்; இவை ஒருபோதும் நிகழா.
""யாரும் செம்பரிதி இருள் பெற்றதென்று சொல்லவில்லையே! ஏன் ஒளிபெற்றது என்கின்றீர்?' என்கின்றார் மகாகவி பாரதி.
இறவாமையின் அடையாளமே உம்பர்கள்தாம். எனவே, அவர்கள் யாரிடமிருந்து இறவாமை பெற இயலும்? இறவாமையே அவர்களிடமிருந்துதானே தோன்றுகிறது. அமரநிலை அது. அகத்தியர் குறைவில்லாத புகழ் பெற்றவர் என்பது அதிசயமன்று. "குறைவிலாப் புகழின் மூலஸ்தானமே அகத்தியர்தாம். எனவே, குறைவிலாத சீர்த்தியாகிய "மகாமகோ பாத்தியாய' என்னும் பதவி தனது தகுதிக்குரிய சான்றோரைச் சென்றடைவதற்காகச் சாமிநாதையரைத் தேடி வந்தது' எனப் பாடினார் மகாகவி பாரதி. அவரது புகழாப் புகழ்ச்சிதான் பின்வரும் பாடல்:
"""செம்பரிதி ஒளிபெற்றான்; பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனர் என்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி எனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் சீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல் இதற்கென்கொல்
பேருவகை படைக்கின்றீரே?''