தமிழ்மணி

சங்க இலக்கியத்தில் தடுமாறும் சில இலக்கண அமைவுகள்

முனைவர் சு. சரவணன்

வினைச்சொல் என்பது மொழியின் சொல் வகைகளில் மிகவும் முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ளது. சங்கத் தமிழ் மொழியினைப் பொருத்தவரை அது வடிவ, செயல் அடிப்படைகளில் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகின்றது. சங்க இலக்கியத்தில் இதன் பயன்பாடு மிகவும் செழிப்பாய் அமைந்தாலும் அடையாளங் காண்பதில் சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது. எழுவாய் இல்லாமலே தமிழ்மொழியில் வினைமுற்றானது ஓர் எழுவாய்த்தொடர் தருகின்ற பொருளைத் தந்துவிடுகின்றது. வந்தேன், வந்தான் என்பன முறையே நான் வந்தேன், அவன் வந்தான் என்னும் தொடர்கள் தரும் பொருள்களைத் தருகின்றன. வினைமுற்றன்றி வினையடியும் முழுமையானதொடர்ப் பொருளைத் தருவதாய் அமையும்.
சான்று: வா, போ என்பன. இந்த வினையடிகளிலிருந்தே பல்வேறு வினைத்திரிபு வடிவங்கள் தோன்றுகின்றன. இவை பல்வேறு நிலைகளில் திரிபடைந்து வருகின்றன. ஆயினும், ஒருசில வினையடிகள் இறந்த காலத்தில் இரு வகையான உருபுகளை எடுத்து வருகின்ற நிலையால் ஏனைய காலங்களிலும் அவை வேறுபட்ட கால உருபுகளை எடுக்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இவ்வகையான தடுமாற்றத்திற்கு இறந்தகால உருபுகளின் இருவகைப்பட்ட சேர்க்கையே காரணமாக அமைகின்றது. இவ்வகையில் அமைந்த வினைகள் சில சங்கத்தமிழில் பயின்று வருகின்றன. அவற்றுள் ஒருசிலவற்றைக் காண்போம். 

ஒலித்துணை உகரத்தால் வேறுபடும் வினைத்திரிபுகள்
மெய்யீற்றினை இறுதியாகக் கொண்டுள்ள சில வினையடிகள் தம் இயல்பான வினைத்திரிபு வகைப்பாட்டிலிருந்து ஒலித்துணை உகரம் பெறும்போது மாற்றமடைகின்றன. மெய்யீற்றினை இறுதியாகவுடைய வினையடிகள் எல்லாம் ஒலித்துணை உகரத்தினைப் பெற்றாலும் அவை வினைத்திரிபு வகைப்பாட்டிலிருந்து மாறுபடுவதில்லை. ஒருசில வினையடிகளே ஒலித்துணை உகரம் பெற்று வினைத்திரிபு வகைப்பாட்டில் மாற்றம் பெறும் வகையில் உள்ளன.
"ர், ல், ழ்'- என்ற மெய்களை ஈற்றெழுத்துகளாகவுடைய ஈரசை வினையடிகள் மட்டுமே சங்க இலக்கியத்தில் அருகிய நிலையில் தம் இயல்பான வினைத்திரிபு வகைப்பாட்டிலிருந்து மாற்றம் பெற்றுவந்துள்ளன. இம்மாற்றம் அவை இறந்த காலத்தில் இருவேறுபட்ட கால உருபுகளை எடுப்பதனால் ஏற்படுகின்றது. 

ரகரவீற்று ஈரசை வினையடிகள் - உயர்:

ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி (பதி. 24:3)
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் (சிலம்பு. 14:8)

இவற்றில் உயர் என்ற வினையடியின் ஈற்றில் எவ்வித ஒலித்துணை உகரமும் இல்லாததால் இயல்பாக 11ஆம் வினைத்திரிபில் (இங்கு வினைத்திரிபு எண்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியின் அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன) அது அடங்கி வருகின்றது. (உயர்த்தோன், உயர்க்கிறோன், உயர்ப்போன்).

உயரு:
விழவுப்படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி (அகம். 189:5)
விசயம் வெல்கொடி உயரி வலனேர்பு (முல். 91)
ஆனால், உயர் என்ற வினையடி ஒலித்துணை உகரம் பெற்றால்தான் அது வினையெச்சமாக மாற்றம் பெறும்போது உயரி என்று மாற்றமடையும். இல்லையேல் இயல்பாக (உயர்+த்தி+இ) உயர்த்தி என்றே வரும். எனவே, பதிவாகியிருக்கின்ற வடிவத்திற்கேற்ப (உயரி) இங்கு வினையடியாக உயரு என்ற வடிவத்தினைக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், அதன் இயல்பான வினைத்திரிபு எண் 11 லிருந்து வேறுபடுத்தப்பட்டு வினைத்திரிபு எண் 5க்கு மாற்றப்படுகின்றது. உயரு என்னும் வினையடியிலிருந்து உயரினான், உயருகின்றான், உயருவான் என்னும் வினைமுற்றுகளை வருவிக்க முடியும். ஆயினும், இறந்த காலத்தில் மட்டுமே இதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. கீழ்க்காணும் வினைவடிவங்களும் இதே நிலையில் அமைந்தவையே. 

புணர்: புணர்ந்துடன் போதல் பொருளென (குறுந். 297:6)
புணரு: விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி (குறுந். 287:6) 

மேலுள்ளது (புணர்) ஒலித்துணை உகரம் இல்லாமல் இயல்பாக அமைய வினைத்திரிபு எண் 4 இல் சேர்க்கப்படுகின்றது. பின்னது ஒலித்துணை உகரம் பெற்றமையால் மேலே கண்டது போல வினைத்திரிபு எண் 5இல் சேர்க்கப்படுகின்றது.

லகரவீற்று ஈரசை வினையடிகள்- பயில், உடல்:

பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல (அகம். 276:10)
மடம் பெருமையின் உடன்று மேல்வந்த (பதி. 56:6)
உடன்றனிர் ஆயினும் பறம்புகொளற்கு அரிதே (புறம். 110:2)

பயிலு, உடலு:

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் (குறும். 2:3)
அணங்குடை அருந்தலை உடலி வலனேர்பு (நற். 37:9)
உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ(ஐங். 66:1)

முன்னவை (பயில், உடல்) இயல்பாக வினைத்திரிபு எண் 3இல் சேர்க்கப்பட, பின்னவை (பயிலு, உடலு) ஒலித்துணை உகரம் பெற்றமையால் 5இல் சேர்க்கப்படுகின்றன. 

ழகரவீற்று ஈரசை வினையடி- பிறழ்: 

பிறழ்ந்து பாய்மானும் இறும்பு அகலாவெறியும் (மணி. 19:97)
அஞ்சன கண்ணெனப் பிறழ்ந்த ஆடல்மீன் (கிட். 10:112)
பிறழு: நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை(புறம். 287:8)

இவற்றில் முன்னது (பிறழ்) வினைத்திரிபு எண்4 லும் பின்னது (பிறழு) வினைத்திரிபு எண்5 லும் சேர்க்கப்படுகின்றன.
இவ்வாறு சங்க இலக்கியத்திலுள்ள பல்வேறு வினைகள் இன்று வழக்கிழந்துவிட்டன. அவை வடிவ அடிப்படையிலும் செயல் அடிப்படையிலும் பல்வேறு நிலைப்பாடுகளில் அமைந்துள்ளன. மேலும், அவ்வினைகளை அடையாளங்கண்டு அவற்றை வகைப்படுத்துவது இன்றளவிலும் இயலாததாகவே இருக்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT