முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் - கலாரசிகன் (13.09.2020)

"சுதாங்கன்' என்று அறியப்படும் "ரங்கராஜன்' நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதழியலில் தடம் பதிக்கத் துடிக்கும் இளைஞராக இருந்த நாள்களிலிருந்து எனக்கு அறிமுகம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

"சுதாங்கன்' என்று அறியப்படும் "ரங்கராஜன்' நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதழியலில் தடம் பதிக்கத் துடிக்கும் இளைஞராக இருந்த நாள்களிலிருந்து எனக்கு அறிமுகம். சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லரை ஒட்டியிருந்த நடைபாதையின் சிமெண்ட் தடுப்புச் சுவரில் ஹாய்யாக உட்கார்ந்து, ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் "ரங்கராஜன்', "ஜூனியர் விகடன்', "தினமணி', தொலைக்காட்சிச் சேனல்கள் என்று சுதாங்கனாக தனது நெடிய ஊடகப் பயணத்தைத் தொடர்ந்தபோது, அதைப் பார்த்துப் பெருமிதம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

சுதாங்கன் "தினமணி' நாளிதழின் இணையாசிரியராகப் பணியாற்றியது மிகக் குறைந்த காலம்தான். "தினமணி' நாளிதழின் வைர விழாவை ஒட்டுமொத்த தமிழரும் கொண்டாடும் விழாவாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

"தினமணி-85' சிறப்பிதழில் அவர் எழுதியிருப்பது போல, தினமணிக்கும் சுதாங்கனுக்குமான பிணைப்பு நான்கு தலைமுறைகளாகத் தொடர்வது. அவரது தாய்வழி கொள்ளுத் தாத்தா பி.ஸ்ரீ., தாத்தா வி.எஸ்.நாராயணன் இருவரும் தினமணியில் உதவியாசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தையார் எஸ். பிச்சுமணி தினமணியின் தீவிர வாசகர். சுதாங்கன் இணையாசிரியராக இருந்தவர்.

"சுதாங்கன்' எழுதிய "உஷார்... உளவாளி!' புத்தகம் குறித்து நான் எழுதியபோது, "செலுலாய்ட் சோழன்' படித்தீர்களா?' என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. நடிகர் சிவாஜி கணேசனை அணுஅணுவாக ரசித்தவர் சுதாங்கன். அவரைப் பற்றி சுதாங்கன் எழுதிய புத்தகம்தான் "செலுலாய்ட் சோழன்'.

கொவைட் - 19ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நான் அனுமதிக்கப் பட்டிருந்தேன். சுதாங்கன் அழைத்தார். ""இப்பவாவது என்னோட "செலுலாய்ட் சோழன்' புத்தகத்தைப் படி கண்ணா!'' என்கிற அன்புக் கட்டளை பிறந்தது. படித்தேன். படித்துவிட்டு அழைத்தேன். "சிவாஜி கணேசன் காலத் தமிழ் சினிமா வரலாற்றைப் படிப்பது போலிருக்கிறது' என்றேன். "எனக்குப் பிறகும் என் பெயர் சொல்லப்போகும் புத்தகம் இதுதான்' என்றார் சுதாங்கன்.

""எப்படிப்பா ஆஸ்பத்திரியில் இருக்கும்போதும் படிக்கிறாய் எழுதுகிறாய்? எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஓய்வெடுக்கக் கூடாதா?'' என்று ஒருநாள் இரவு நடுநிசியில் அழைத்து செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அது நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.

அதற்குப் பிறகு ஒரு நாள் அழைத்தார். அப்போது நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். ""நன்றாகக் குணமானதும் என் வீட்டுக்கு வா. நான் நன்றாக சமையல் பண்ணுவேன் தெரியுமா? என் சமையலை நீ சாப்பிட்டுப் பாரு, அசந்து போயிருவே கண்ணா'' என்று சொல்லி சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதுதான் அவருடனான எனது கடைசி உரையாடல்.

சுதாங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை ராஜ்கண்ணன் தெரிவித்தது முதல், அவர் சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டிருந்தேன். அடிக்கடி மதன், "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாசன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "ராசிபுரம்' கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நண்பர்களுடன் சுதாங்கனின் உடல்நிலை குறித்துப் பேசிய வண்ணம் இருந்தேன். நேற்று காலையில்தான் நானும் கே.பி.ராமலிங்கமும் சுதாங்கன் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

எல்லாம் கடந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. "செலுலாய்ட் சோழன்' சிவாஜி கணேசன் தமிழக மக்களின் நினைவில் வாழும் வரை, சுதாங்கனும் இருப்பார்!

-------------------------------------------------------------------------------------------

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பார்கள். 64 பக்கங்களில் வெடிக்கக் காத்திருக்கும் பூகம்பத்தின் வீரியத்தைப் புதைத்து வைத்திருக்கிறது ஒரு சின்னஞ் சிறிய புத்தகம்.

இது போன்ற அரிய பழைய நூல்களை, "முல்லை பதிப்பகம்' பழநி அல்லாமல் வேறு யார் எனக்கு அனுப்பித்தரப் போகிறார்கள்?

1953-ஆம் ஆண்டில் வெளியான நாமக்கல் கவிஞர் எழுதிய அந்தப் புத்தகத்தின் பெயர் "தமிழ் மொழியும் தமிழரசும்'. "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் புத்தகங்களை ஆரம்ப காலத்தில் வெளியிட்டு வந்த மயிலாப்பூர் "இன்ப நிலையம்' நிறுவனம் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது.

மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில், 1930-ஆம் ஆண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகத்துக்காகத் திருச்சியிலிருந்து பாத யாத்திரையாகச் சென்றபோது, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு உற்சாகமூட்டியவை "தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா', "கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' போன்ற நாமக்கல் கவிஞரின் பாடல்கள். தமிழக அரசின் முதல் "அரசவைக் கவிஞர்' என்கிற பெருமைக்குரிய கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய "தமிழ் மொழியும் தமிழரசும்' தமிழர்களின் சிந்தனையில் இன்றும் நிலவும் பல கேள்விகளுக்கு விடை பகரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

"தமிழ் மொழியும் தமிழரசும்', "தமிழின் சிறப்பு', "தமிழின் வளர்ச்சி', "தனித் தமிழ்', "திசைச் சொல் இலக்கணம்', "தமிழும் ஆரியமும்', "ஆரியமும் திராவிடமும்', "தமிழ்நாடு', "தமிழ் அரசு', "தமிழர் பண்பு' என்று நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்புதான் "தமிழ் மொழியும் தமிழரசும்'. நாமக்கல் கவிஞரின் பளிங்குபோன்ற தெள்ளிய சிந்தனையும், ஆற்றொழுக்கு போன்ற எளிய தமிழ் நடையும், ஆணித்தரமான வாதங்களுடன் அவர் முன்வைக்கும் கருத்துகளும் சிலிர்க்க வைக்கின்றன.

""அணுகுண்டை வீசி உலகத்தை அழிக்கப் பார்க்கிற ஐரோப்பிய அநாகரிகங்களில் மோகங் கொண்டு, தெய்வ நிந்தனைகள் பேசித் திரிவதற்குத் தமிழ்நாட்டில் தமிழரசு வந்தாலென்ன, ஆங்கில அரசே இருந்தால்தான் என்ன?'' என்கிற அவரது பொட்டிலறைந்தாற் போன்ற கேள்வியின் நியாயம், பகுத்தறிவு உள்ளவர்களுக்குப் புரியும்.

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இந்தப் புத்தகம் பதிப்பாளர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு, இன்றைய தலைமுறையின் மயக்கம் அகற்றப்பட வேண்டும்.

தினமணி நாளிதழின் நிருபராகப் பணியாற்றும் கோபி கிருஷ்ணா கட்செவி அஞ்சலில் அனுப்பித் தந்திருக்கும் "கரோனா காலம்' என்கிற அவரது கவிதை இது.

பள்ளி வகுப்பறை அனைத்துமே அசுத்தம், கரும்பலகை தவிர...!

முழு கட்டுரையைப் படிக்க →