இந்த வாரம் கலாரசிகன் (31/10/2021)
கண்ணிமைக்கும் நேரத்தில் காலம் ஓடுகிறது. பெரியவர் ப.முத்துக்குமாரசுவாமி ஐயா மறைந்து ஓராண்டாகிவிட்டது என்பதை நினைத்தபோது,
கண்ணிமைக்கும் நேரத்தில் காலம் ஓடுகிறது. பெரியவர் ப.முத்துக்குமாரசுவாமி ஐயா மறைந்து ஓராண்டாகிவிட்டது என்பதை நினைத்தபோது, உலக இயக்கத்தின் வேகம் புரிந்தது. வெள்ளிக்கிழமை அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், நினைவெல்லாம் அவரையே சுற்றிவந்த வண்ணம் இருந்தது.
எத்தனை பெரிய மனிதர், அவருக்கு எவ்வளவு பெரிய மனது, என்னவொரு எளிமை என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, அப்படியொரு மாமனிதருடன் பழகும் வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது. பெரியவர் ப.முத்துக்குமாரசுவாமி ஐயா இல்லாவிட்டால், தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து "தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு' கூட்டியிருக்க முடியாது. மலர் தயாரித்து வெளியிட்டிருக்க முடியாது.
சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று சொல்வார்கள். அதேபோல, முத்துக்குமாரசுவாமி ஐயாவையும் சைவத்திலிருந்தும், தமிழிலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாது. மாதா மாதம் கொல்லூர் மூகாம்பிகை தரிசனத்துக்குச் சென்றுவிடுவார். திரும்பி வந்தவுடன் பெரும்பாலும் பிரசாதத்துடன் என்னை சந்திக்கவும் வந்துவிடுவார். எனது பெயர்த்திக்கு கொல்லூர் மூகாம்பிகையை நினைவில் கொண்டு "ஜனனி' என்று பெயர் வைத்தவர் முத்துக்குமாரசுவாமி ஐயாதான்.
அவரது "பெருந்தமிழ்' என்கிற தொகுப்பு, தமிழுக்கு அவர் வழங்கியிருக்கும் மிகப்பெரிய கொடை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த தமிழ் அறிஞர்கள் பலர், பண்டைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் தேடி அலைந்து, கண்டுபிடித்துத் தொகுத்திருப்பது அவர் ஆற்றியிருக்கும் பெரும்பணி.
கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு எழுதிக் குவித்தார் அவர். ஏழு அரிய நூல்களைப் படைத்து அச்சுக்கு அனுப்பினார். ஏற்கெனவே அவர் வெளியிட்டிருந்த 127 புத்தகங்களின் பட்டியலில் அவையும் இணைந்தன. அது குறித்து என்னிடம் நீண்ட நேரம் கைப்பேசியில் உரையாடினார். அதுதான் எங்களுக்குள் நடந்த கடைசி உரையாடலும்கூட.
சென்னையில் "இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு' நடந்ததிலிருந்தே அவர் மனமொடிந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். உதவுகிறோம் என்று வந்தவர்கள் விளம்பரம் தேடிக் கொண்டார்களே தவிர, முத்துக்குமாரசுவாமி ஐயாவும், கிருங்கை சேதுபதியும்தான் கடைசி வரை அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தினார்கள். உணவுக்கும் ஏனைய ஏற்பாடுகளுக்கும் பணம் கொடுக்க வேண்டிய நேரத்தில் எல்லோரும் இருக்குமிடம் தெரியாமல் பறந்து விட்டனர். தள்ளாத வயதிலும் தன்னந்தனியாக அந்தச் சோதனைகளை அவர் எதிர்கொண்ட சோகத்தை யாரிடம் சொல்வது?
அகவை 85 வரை நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் என்கிற அளவில் நாம் திருப்திப்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மகனுக்கு மகனாக அவரைப் பார்த்துக்கொண்ட மருமகன் நடராஜன் சமீபத்தில் காசி, திரிவேணி என்று சென்று அவருக்கு ஈமக்கடன் செலுத்திவிட்டுத் திரும்பியதைக் கட்செவி அஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார். முத்துக்குமாரசுவாமி ஐயா மறைந்துவிட்டார் என்பது தெரிகிறது. ஆனால், மனம்தான் அதை நம்ப மறுக்கிறது, என்ன செய்ய?
முத்துக்குமாரசுவாமி ஐயாவுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அதை என்னிடம் மூன்று நான்கு முறை சொல்லித் தனது ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார். மகாகவி பாரதியார் குறித்த ஆய்வுகள் செய்து, பல புத்தகங்களை எழுதியிருக்கும் கிருங்கை சேதுபதிக்கு தமிழக அரசின் பாரதியார் விருது வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது அந்த நிறைவேறாத ஆசை.
முந்தைய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கு முத்துக்குமாரசுவாமி ஐயாவும், நானும் பரிந்துரையெல்லாம் செய்தோம். பயனில்லை. இப்போதைய அரசாவது ஐயாவின் அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது கோரிக்கை. தகுதியானவருக்கு, மிகத் தகுதியான தமிழறிஞர் பரிந்துரை செய்திருக்கிறார் என்பதை நான் பதிவு செய்ய விழைகிறேன்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் "டாக்டர் சுதா மேடம் ஸ்டூடன்ட்' என்று பெருமிதத்தோடுக் கூறக் கேட்டிருக்கிறேன். உடற்கூறியலில் டாக்டர் சுதா சேஷய்யனுக்கு நிகரான மருத்துவப் பேராசிரியர் கிடையாது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மருத்துவப் பேராசிரியராக மட்டுமல்லாமல், தலைசிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், ஆன்மிக சொற்பொழிவாளராகவும், பலமொழிப் புலமை கொண்டவராகவும், சிறந்த எழுத்தாளராகவும் பன்முகப் பரிமாணம் கொண்ட ஆளுமையாக வலம் வருபவர் டாக்டர் சுதா சேஷய்யன்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான அவரது செயலும் சிந்தனையும் கடந்த ஓராண்டாக கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் பெரும்பாலும் கழிந்ததில் வியப்பில்லை. உலகையே ஆட்டிப்படைத்த அந்தக் கொள்ளை நோய்த்தொற்றுக்குக் காரணமான தீநுண்மி குறித்து அவரைவிடச் சிறப்பாக வேறு எவரும் நமக்கு எடுத்துரைத்துவிட முடியாது.
கொவைட் 19 தீநுண்மி மட்டுமல்ல, உலகைத் தாக்கிய எல்லா தீநுண்மிகள் குறித்தும் சாமானிய வாசகர்களுக்கும் புரியும் விதத்தில் அவரால் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் "உயிரற்ற உயிர் - அதிர வைக்கும் வைரஸ்'. வைரஸ் (தீநுண்மி) குறித்த ஆதி அந்தம் அவரால் அலசப்பட்டிருக்கிறது, விவரிக்கப்பட்டிருக்கிறது.
"பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூஞ்சை, அமீபா போன்றவற்றை "உயிர் வாழ்வன' என்று வகைப்படுத்தலாம். ஆனால், வைரஸ்களை இவ்வாறு வகைப்படுத்த முடியாது. ஏனெனில், இவை இரண்டுங்கெட்டான். வைரஸ்களின் திறமையே இதில்தான் இருக்கிறது'' என்பதிலிருந்து தொடங்குகிறது உயிரற்ற உயிர் குறித்த அவரது புத்தகம்.
அதற்கு "வைரஸ்' (தீநுண்மி) என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது, அதன் உயிர் ரகசியம் என்ன, அதை மனித இனம் தெரிந்து கொள்வதற்காக ஆய்வுகள் செய்து வழங்கி அதற்காக உயிரைத் தந்த மருத்துவர்கள் என்று அரிச்சுவடி பாடத்திலிருந்து தொடங்கி முனைவர் பட்ட ஆய்வுபோல விரிகிறது இந்தப் புத்தகம்.
தட்டம்மை, மஞ்சள் நோய், எபோலா போன்ற தீநுண்மிகள், அவற்றை எதிர்கொள்ள தடுப்பூசிகள் (வேக்ûஸன்) கண்டுபிடிக்கப்பட்ட விதம் என்பதிலிருந்து, கொள்ளை நோய்த் தொற்றுகள் குறித்தும், தீநுண்மிகள் குறித்தும் விவரமாக விளக்கியிருக்கிறார் டாக்டர் சுதா. இவையெல்லாம் போதாதென்று, சமீபகாலமாக அடிக்கடி பயன்படுத்தப்படும் மருத்துவ அறிவியல் பெயர்களுக்கான தமிழ்ச் சொற்களையும் வழங்கி இருப்பது தனிச்சிறப்பு. கரோனா, கரோனா என்கிறார்களே, அது என்ன கரோனா என்று கேட்பவர்கள், "உயிரற்ற உயிர்' புத்தகத்தைப் படித்தால் புரியும்.
Advertisement
காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது யூடியூபில் "நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேட்டியைப் பார்த்தேன். மதுவிலக்கு பற்றிக் கூறும்போது, ஒரு கவிதை சொன்னார். நன்றாக இருந்தது என்பதால் குறித்து வைத்துக் கொண்டேன். இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குடிகாரர்களின்
வரிப்பணத்தில்
நடக்கும் அரசு
குடியரசு!