இந்த வாரம் கலாரசிகன் - (16-04-2023)
குடியேற்றம் கம்பன் கழக மேடையில் சென்ற சனிக்கிழமை அமர்ந்தபோது, கம்பன் கழகங்களின் வரலாறு என் நினைவில் பின்னோட்டமாக ஓடியது.
குடியேற்றம் கம்பன் கழக மேடையில் சென்ற சனிக்கிழமை அமர்ந்தபோது, கம்பன் கழகங்களின் வரலாறு என் நினைவில் பின்னோட்டமாக ஓடியது. "தீ பரவட்டும்' என்கிற முழக்கத்தோடு கம்பகாதையை நெருப்பிட ஒருசாரார் போராட முற்பட்டதும், அதற்கு ஆக்கபூர்வ எதிர்வினையாக "கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்' என்று புதியதொரு இயக்கம் எழுந்ததையும் தமிழகம் நினைவுகூரத் தோன்றியது.
"கம்பன் அடிப்பொடி' சா. கணேசனின் முன்னெடுப்பில் காரைக்குடியில் "கம்பன் அறநிலை' தோற்றுவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து கோவையில் ஜி.கே. சுந்தரம் "கோவை கம்பன் கழகம்' ஏற்படுத்தியதும் வரலாற்று நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் எல்லா நகரங்களிலும் கம்பன் புகழ்பாடி தமிழ் வளர்க்கப் பலர் களமிறங்கினார்கள். அந்த முன்னோடிகளின் பங்களிப்பு சாதாரணமானதல்ல.
சென்னை நீதியரசர் மு.மு. இஸ்மாயில், பழ. பழநியப்பன்; கோவை நஞ்சுண்டன்; வேலூர் குப்புசாமி முதலியார்; புதுவை கோவிந்தசாமி முதலியார், முருகேசன்; ராஜபாளையம் முத்துக்கிருஷ்ண ராஜா; திருப்பத்தூர் மாரிமுத்து செட்டியார் தொடங்கி எத்தனையோ பெரியவர்கள் ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்துவதைத் தங்களது வாழ்நாள் பேறாகக் கருதி செயல்பட்டதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
நீதியரசர் மு.மு. இஸ்மாயில் தலைமையில் சென்னை கம்பன் கழகம் பைபிள் காகிதத்தில் வெளியிட்ட கம்ப ராமாயணம் பதிப்பும், அ.ச. ஞானசம்பந்தனின் தலைமையில் கோவை கம்பன் கழகம் வெளிக்கொணர்ந்த கம்ப ராமாயணப் பதிப்பும் அசாதாரண முன்னெடுப்புகள். கோவை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வெளிக்கொணரும் கம்பன் விழா மலரில் இடம் பெற்ற கட்டுரைகள் அனைத்தும், கம்பனில் மேற்கொள்ளப்பட்ட ஆழங்காற்பட்ட ஆய்வுகள். ராஜபாளையம் கம்பன் கழகம் வெளிக்கொணர்ந்த கம்பகாதை தொடர்பான புத்தகங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள்.
கம்பன் விழாக்களில் தங்களை உரையாற்ற அழைக்கமாட்டார்களா என்று தமிழறிஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இருந்தது. எங்கே கம்பன் விழா நடந்தாலும், அதில் கலந்து கொண்டு அறிஞர்களின் உரைகளைக் கேட்க ஆவலாக நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் தமிழகமெங்கும் இருந்தனர்.
இன்று பேச்சாளர்களும் குறைந்துவிட்டார்கள்; கம்பன் விழாவை சிறப்பாக நடத்த உதவிக்கொண்டிருந்த புரவலர்களும் அருகிவிட்டனர்; பார்வையாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்வதில்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
புதிதாக இளையதலைமுறையினர் மத்தியில் கம்பகாதை குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஒருசில கம்பன் கழகங்கள் ஆங்காங்கே கம்பனில் பேச்சுப் போட்டி நடத்தாமலில்லை. ஆனால், அதில் பங்கு பெறும் இளைஞர்கள் தமிழக அளவில் அறிமுகமாவதில்லை.
குடியேற்றம் கம்பன் கழக பத்தாவது ஆண்டு விழா மேடையில் நானும் அதன் நிறுவனர் ஜெ.கே.என். பழனியும் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தோம். அனைத்துக் கம்பன் கழகங்களிலும், கம்பகாதை குறித்த பேச்சுப் போட்டி நடத்துவதுடன், அதில் பங்கு பெறும் இளைஞர்களுக்கு மாநில அளவில் போட்டி நடத்தி, அவர்களை ஊக்குவிப்பதுதான் இன்றைய அவசரத் தேவை.
எல்லா கம்பன் கழகங்களின் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து, இதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கம்பன் கழக முன்னோடிகளுக்கு நாம் செய்யும் கைம்மாறு அதுவாகத்தான் இருக்கும்!
ரம்ஜான் நோன்பு தொடங்கினால் நண்பர் எம்.ஏ. முஸ்தபா, தனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் கிளம்பிவிடுவார். அவர் சிங்கப்பூர் கிளம்புவதற்கு முன்பு சந்திக்க வேண்டும் என்று அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
மேஜையில் இலங்கை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' புத்தகம் இருந்தது. அப்துல் ஹமீதின் அரை நூற்றாண்டு அனுபவப் பதிவு அது. அந்த புத்தகத்தை எடுத்து நான் புரட்டத் தொடங்கியதுமே, "நான் படித்துவிட்டேன். நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்' என்று எனக்கு தந்துவிட்டார் முஸ்தபா. இரண்டு நாள் முன்புதான் அந்தப் புத்தகத்தை முழுவதுமாக படிக்க முடிந்தது.
இலங்கை வானொலியில் அப்துல் ஹமீத் தமிழ் திரைப்படப் பாடல்களை தொகுத்து வழங்கும் அலாதியான பாணியைப் போலவே தனது அனுபவங்களையும் வித்தியாசமான விதத்தில் அந்த புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் ஆகியோருடனான அவரது ஆரம்ப கால நட்பு சுவாரஸ்யமானது. எத்தனையோ பட்டங்கள் சிவாஜிக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இலங்கை வானொலியில் அப்துல் ஹமீத் வழங்கிய "கலைக்குரிசில்' பட்டம் இன்றும்கூட தனித்துவமாக விளங்குகிறது.
பிரேமதாச இலங்கையின் பிரதமராக இருந்தபோது அவருடனான அப்துல் ஹமீதின் சந்திப்பும், நிகழ்வுகளும் தரப்பட்டிருக்கின்றன. அரசியலில் அவருக்கு தொடர்பு இல்லை என்றாலும்கூட, அவரது இலங்கை வானொலிப் பணி அரசு சார்ந்த நிகழ்வுகளில் பொறுப்பேற்க வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. அதைப் பதிவு செய்திருக்கிறார்.
பள்ளிப் பருவத்தில் சிங்கள மொழி கட்டாயப் பாடமாக திணிக்கப்பட்டபோது வெறுப்பை வெளிக்காட்டிய ஹமீத், வெற்றிகரமான ஊடகவியலாளரான பிறகு தெரிவிக்கும் கருத்து இது - ""இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், தாய்மொழிப் பற்று கடுகளவேனும் குறையாது. மாறாக, அந்த மொழி பேசுவோர் மத்தியில், "அவர்களைவிட நமக்கு இன்னுமொரு மொழியிலும் பாண்டித்தியம் உண்டு' என்ற காரணத்தால் தலைநிமிர்ந்து நடக்கலாம். தாய்மொழிப் பற்று என்பது இன்னொரு மொழியை வெறுப்பதில் தங்கி இருக்காது.'' அவரது கருத்தை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான்.
"சூரியோதயம்' தமிழ் திரைப்படத்தில் இவர் நடிக்க நேர்ந்த காரணமும், "தெனாலி' திரைப்பட அனுபவமும் சுவாரஸ்யமான பதிவுகள். அதேபோலத்தான் அவரது பாடலாசிரியரான அனுபவமும். தமிழக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அவரது அனுபவமும், வானலை வழிப்போக்கனின் நேரலைப் பங்களிப்புகள். சுவாரஸ்யமான வாசிப்பு.
வாட்ஸ்ஆப்பில் எனக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது அறிவுமதியின் கவிதை. நான் ரசித்தேன். நீங்கள் ரசிப்பீர்கள்...
யார் அங்கே?
காக்கைகளைக் கைது செய்
என் கட்அவுட்டில் எச்சம்!