முனைவர் கி. சிவா
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்று சொல்லப்பட்டாலும் முருகன் இயற்கையே உருவானவன். அதனால்தான், அவன் இயற்கையின் பல்வேறு இடங்களில் உறைந்துள்ளதை
வேலன் தைஇய வெறியயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
ஆறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை
நிலையினும்...
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர்
வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே
(திருமுரு. 222249)
எனத் திருமுருகாற்றுப்படை எடுத்தியம்பியுள்ளது. இப்பாடலடிகளுக்கு, வேலன் என்ற முருகப்பூசாரி நிகழ்த்துகின்ற வெறியாட்டுக் களங்கள், காடுகள், சோலைகள், ஆற்றுக்கு இடையில் அமைந்த மேட்டுப் பகுதிகள் (துருத்தி), (அரங்கங்கள்), ஆறுகள், குளங்கள், நான்கு தெருக்கள் கூடும் சதுக்கங்கள், தெருக்களின் சந்திப்புகள், புத்தம்புது மலர்களை ஊழ்த்திருக்கும் கடம்ப மரங்கள், ஊர்ப்பொதுமக்கள் கூடுகின்ற மரத்தடிப் பொதுவிடங்கள், அம்பலங்கள், தூண்கள் (கந்துகள்) எனத் தன்னை விரும்பியவர்கள் விரும்பியபடி, அவர்கள் எண்ணுமிடத்தில் தோன்றி அருளுகின்ற அருந்தெய்வம் முருகன் என்பது பொருள். முருகனின் அருமைகளும் பெருமைகளும் அளவிடற்கரியன.
பரிபாடலில் (5:50) "பெரும்பெயர் முருகன்' எனக் குறிப்பிடப்படுகிறான்.
முருகனுக்குப் பழந்தமிழில் சேயோன் (தொல்காப்பியம்), சேஎய் (புறம்.14:19, 22:29; திரு.61, 271; பெரும்.458; குறிஞ்.5152 முதலிய 20 இடங்கள்), கந்தன் (புறம். 380:12), குமரன் (பரி.9:82), செல்வன் (அகம்.98:18), செவ்வேள் (பட்டி.154, பரி.5:13, 34:2, 35:2), நெடுவேள் (அகம்.98:27 முதலிய 17 இடங்கள்), முருகு, வேலன் (பரி.17:3) என்று பல பெயர்கள் உண்டு. அதேபோன்று, பிற்காலத்தில் வீரன் என்ற பொருளில் "சேவகன்' (திருச்செந்தின் மாலை), விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன் என்ற பொருளில் "விசாகன்', அச்சத்தைத் தருபவன் என்ற பொருளில் "நாமன்' முதலிய வெவ்வேறு பெயர்களால் முருகன் குறிப்பிடப்பட்டுள்ளான்.
"வில்லாளியாகி தனிநின்ற விசாகன்' (உற்பத்திக் காண்டம், 15:60) என்று முருகனை கந்தபுராணத்தில் கச்சியப்பசிவாசாரியார் ஏத்தியுள்ளார்.
பத்துப்பாட்டின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (14ஆம் நூற்றாண்டு) "நாமனூர் அலைவாய் என்னும் திருப்பதி' (உ.வே.சா. பதிப்பு, பத்துப்பாட்டு, 1889:23) என்று திருச்செந்தில் ஆகிய திருச்செந்தூரைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, 14ஆம் நூற்றாண்டில் நாமன் என்று முருகன் குறிப்பிடப்பட்டிருக்கலாம். நாமன் உறைகின்ற ஊர் நாமனூர் எனப்பட்டது.
நாமன் என்றால் (பகைக்கு) அச்சம் தருபவன் என்று பொருள். நாமம் என்ற உரிச்சொல் அச்சம் என்ற பொருளைத் தரும் (தொல்.உரி.நூ.67) என்கிறார் தொல்காப்பியர்.
நாடு கவின்அழிய நாமம் தோற்றி (பதி.13:10) நாட்டின் அழகெல்லாம் அழியும்படி எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்கி
நாமம் அறியா ஏம வாழ்க்கை (பதி.68:12) அச்சம் அறியாத பாதுகாப்புடைய வாழ்க்கை
வில்சுழி பட்ட நாமப் பூசல் (நற்.65:7) கானவர்களின் வில்லின் சுழிப்பினைக் கண்டு அஞ்சிப் பேரொலி எழுப்பும் யானை
நரைஉரும் உரறும் நாம நள்ளிருள் (நற்.122:5) வெண்மையான மின்னல் (நரைஆகுபெயர்) ஒளியுடன் உரும் (இடி) இடிக்கும் அச்சந்தருகின்ற இராப்பொழுது
இப்படிப் பழந்தமிழ் நூல்களில் மேலே சுட்டிய இடங்களுடன் சேர்த்து மொத்தம் 15 இடங்களில் (பதிற்.54:14, 88:8; அகம்.18:7, 72:14, 131:7, 235:14;
புறம்.16:18; நற்.287:6; பரி.3:92, 15:25; கலி.30:12) இச்சொல் அச்சம் என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. நாமவேல் கண்ணாள் (திணை.150.25:3), நாமநீர் வேலி (சிலம்பு.புகார்.1:8) ஆகிய பிற இடங்களிலும் அச்சம் என்னும் பொருளிலேயே பயின்று வந்துள்ளது.
நச்சினார்க்கினியர் காலத்தில் முருகனுக்கு வழங்கிய நாமன் என்ற பெயரை நாம் மறத்தலாகாது. மீண்டும் அச்சொல்லை மீட்டெடுப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.