'பண்டைத் தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்கள் காலத்தைக் கடந்து நிற்கும்போது அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் இருந்ததற்கான அடையாளம்கூட இல்லாமல் இருக்கிறதே... எதனால்?'' என்கிற உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி அரங்க.மகாதேவனின் கேள்வி என்னைப் போலவே 'தினத்தந்தி' நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாரையும் வியப்பில் ஆழ்த்தியது. நாங்கள் இருவரும் இது குறித்து விவாதித்தோம்.
அடுத்த நாளே அவரிடமிருந்து எனக்கு கைப்பேசி அழைப்பு வந்தது. அந்தக் கேள்விக்கான விடை தினத்தந்தியின் முன்னாள் செய்தி ஆசிரியர் தனசேகரன் எழுதிய 'ராஜேந்திர சோழன்' புத்தகத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
'நமது மூவேந்தர்களும், மன்னர்களும் இறைவனுக்குரிய ஆலயம்தான் காலாகாலத்திற்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதால் கருங்கற்கள் கொண்டு உறுதியாகக் கட்டினார்கள். வாய்ப்பு வசதி இருந்தாலும், தாங்கள் வசிக்கும் அரண்மனைகளை அவ்வாறு கட்டாமல் செங்கற்களைக் கொண்டும், மணல் சுண்ணாம்பு கலவை கொண்டும் அமைத்துக் கொண்டார்கள்' என்பது அந்த நூல் தரும் விளக்கம்.
சோழ மன்னன் ராஜேந்திரன் அமைத்த தலைநகரின் மையப் பகுதியில், அரச குடும்பத்திற்கான அரண்மனை இருந்ததாகத் தெரிகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோயிலிருந்து மேற்கே மூன்று கல் தொலைவில் 'மாளிகைமேடு' எனப்படும் இடத்தில் அரண்மனை இருந்ததற்கான சான்றுகள் அகழாய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
அது குறித்த விவரமான தகவல்கள் தனசேகரன் எழுதிய புத்தகத்தில் இருப்பதாகவும், அந்தப் புத்தகம் கிடைக்காததால் அரண்மனை பற்றிய குறிப்புகள் இருந்த பகுதியை மட்டும் தனசேகரனிடம் கேட்டு வாங்கி அனுப்பித் தந்தார் நண்பர் சுகுமார்.
தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளாத நமது முன்னோரின் பண்பை நினைத்தால் சிலிர்ப்பு மேலிடுகிறது.
--------------------------------------
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தமிழகத் தியாகிகள் ஏராளம். அவர்களுக்குத் தேசிய அளவிலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை, திராவிட இயக்கங்களின் மேலாதிக்கத்தால் தமிழகத்திலும் அவர்களது தொண்டும், தியாகமும் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டன. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.வே.சு.ஐயர், வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றவர்களுக்கே உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனும்போது மற்றவர்கள் குறித்துச் சொல்லி என்ன பயன்?
சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய பதிப்பகம் என்பதால், தேசியவாதிகளான தலைவர்கள் குறித்துப் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது நூற்றாண்டு கடந்து பயணிக்கும் அல்லயன்ஸ் நிறுவனம். அவர்கள் வெளியிட்டிருக்கும் தேசபக்தர் வரிசை நூல்களில் ஒன்று 'மதுவிலக்கின் மாண்பு'.
சுதந்திரப் போராட்டத் தியாகி வாலாஜாபேட்டை தீனபந்து ஆசிரமம் கே.ஆர்.கல்யாணராமய்யர் என்று சொன்னால் யாருக்கு இப்போது தெரியும்? அவர் 1940-இல் எழுதிய 'மதுவிலக்கின் மாண்பு', 1946-இல் எழுதிய 'மதுபானம் ஒழிக' ஆகிய இரண்டு நூல்களையும் இணைத்து ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறது அல்லயன்ஸ் பதிப்பகம்.
யார் அந்த வாலாஜாபேட்டை கே.ஆர். கல்யாணராமய்யர் என்றுதானே கேட்கிறீர்கள்? ராஜாஜியின் அணுக்கத் தொண்டர்; காமராஜரின் நம்பிக்கைக்கு உரிய நண்பர்; ராணிப்பேட்டையில் தொழிற்சங்கம் அமைத்த முன்னோடி. 1942 போராட்டத்தில், கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து போராட முடிவெடுத்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் சென்ற இடம் கல்யாணராமய்யரின் வீட்டுக்குத்தான். இருவரும் காவல் துறையின் கண்களில் அகப்படாமல் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, ஆகஸ்ட் புரட்சிக்கு வலு சேர்த்தனர்.
மதுவிலக்கு அமலானது, மது விலக்குப் பிரசாரத்திற்காக ராஜாஜி நடத்திய சுற்றுப்பயணம், காந்திஜியின் தமிழக வருகை, கல்யாணராமய்யரின் சிறைவாசம், வாலாஜாபேட்டையில் அமைந்த தீனபந்து ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக அமைந்த 'மதுவிலக்கின் மாண்பு', விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் அற்புதப் பதிவு.
1940-இல் வெளியான புத்தகத்துக்கு சிறப்புரை வழங்கியவர்கள் இருவர். முதலாமவர் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.காமராஜ்; இன்னொருவர் 'தினமணி' நாளிதழின் துணை ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமன். வரலாற்று ஆவணம் இந்தப் புத்தகம்!
--------------------------------------
நாகர்கோவில் கோட்டாறிலிருந்து வெளிவரும் இடதுசாரி சிந்தனை தனிச்சுற்றுக் காலாண்டிதழ் 'திணை'. குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் குரலாக ஒலிக்கும் இதழ் என்றுகூடச் சொல்லலாம்.
அதன் ஜூன்-ஆகஸ்ட் 2024 இதழில் வெளிவந்திருக்கிறது எம்.எம். பைசல் எழுதிய இந்தக் கவிதை. போர்ச் சூழல் ஏற்படுத்தும் பெரும்துயரம் எத்தகையது என்பதை இதைவிட உருக்கமாக யாரும் வார்த்தைகளில் வழங்கிவிட முடியாது.
குண்டுகளை
வாரி இறைக்கும்
நாடுகள்
அவனுடைய
இரைப்பையை
நிரப்புவதில்லை
தாயை இழந்து
தந்தையை இழந்து
நாடிழந்து நிற்கும்
அவன்
வானத்தையே
பார்த்துக்
கொண்டிருக்கிறான்
சிறகாக
அசைந்து
ஒரு ரொட்டி வருமென்று...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.