தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் இரா. முகுந்தன் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, வட மாநிலங்களில் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாமே என்று தோன்றியது. கிளம்பிவிட்டேன்.
வெயில் என்றால் அப்படி வெயில். உத்தரபிரதேசம், தில்லி, ஹரியாணா மாநிலங்களில் வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதனால் பெரிய அளவில் தேர்தல் பிரசாரத்தில் சூடு தெரியவில்லை. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன், ஆம் ஆத்மி கட்சியில் குழப்பம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஊடகங்களில் ஏற்படுத்தும் பரபரப்பு பொதுமக்கள் மத்தியில் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.
நண்பர்கள் பலர் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒன்று இரண்டு பேரை மட்டும்தான் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முடிந்தது.
தில்லியில் என்னுடன் வந்து இணைந்து கொண்டார் எனது நீண்ட நாள் நண்பரும், மதுரை செளராஷ்டிரா கல்லூரியின் முன்னாள் தலைவருமான வி.ஜி. ராமதாஸ் . ஹிமாசல பிரதேச, மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுவது பற்றிய பேச்சு வந்தது.
தர்மசாலா சென்று பெளத்த மதத்தின் தலைமை குருவான தலாய் லாமாவை சந்திக்க முடியுமா என்று ராமதாஸ் கேட்டபோது, எனக்கும் அவரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் மேலிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தர்மசாலா சென்று தலாய் லாமாவை சந்தித்திருக்கிறேன். அதனால் உற்சாகமாகக் கிளம்பி விட்டேன் .
தலாய் லாமாவை சந்திப்பது என்பது வாழ்க்கையின் உன்னதமான தருணங்களில் ஒன்று. காஞ்சிப் பெரியவரை தரிசிக்கும்போது ஏற்படும் பரவசம், தலாய் லாமாவின் பார்வை நம் மீது படும்போது ஏற்படுகிறது என்பது நான் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. அகவை 89 என்பதால் உடலில்தான் சற்று தளர்வே தவிர, அவரது நினைவாற்றலும், தன்னைத் தேடி வரும் பக்தர்களை சற்றும் சலிக்காமல் சந்தித்து உரையாடும் கருணையும் நம்மை ஆட்கொண்டு விடுகிறது.
ஒருமுறை அவரை எட்ட நின்று தரிசிப்பதற்கு உலகெங்கிலும் இருந்து தர்மசாலாவில் பல்லாயிரக்கணக்கானோர் குவிகிறார்கள். தலாய் லாமா மதகுரு மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருக்கும் திபெத் அரசின் தலைவரும் கூட என்பதால், அவரை நெருங்குவதற்கு ஏகப்பட்ட பாதுகாப்புத் தடைகள். சீனாவால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதும் கூட அதற்குக் காரணம்.
தலாய் லாமாவை அருகில் சென்று தரிசிக்க முடிந்தது என்பது மட்டுமல்ல, அவர் தனது மடியில் எனது தலையை வைத்து ஆசீர்வதித்ததும், இரு கரங்களையும் வாத்சல்யத்துடன் பற்றி வாழ்த்தியதும், ஒரு சில நிமிடங்கள் உரையாடியதும் கனவு போல இருக்கிறது. எத்தனை பிறவிகளில் என்ன தவம் நோற்றேனோ இப்படியோர் அதிருஷ்டம் வாய்க்கப் பெற்றதற்கு...
தர்மசாலா வரை போய்விட்டு உடனே திரும்ப மனம் வரவில்லை. நமது வைத்தீஸ்வரன் கோயிலைப் போல, தர்மசாலாவின் அருகில் உள்ள பைஜ்னாத் (வைத்யநாத்) என்கிற இடத்தில் அமைந்திருக்கும் கி.பி. 804இல் கட்டப்பட்ட 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று அமைந்திருக்கும் சிவாலயத்திலும், சக்தி பீடங்களில் ஒன்றான "ஜ்வாலாமுகி' கோயிலிலும், சித்த பீடங்களில் ஒன்றான பகளாமுகி தேவி கோயிலிலும் தரிசனம் செய்து விட்டுத்தான் தில்லி திரும்பினோம்.
வாழ்க்கையில் மறக்கவே முடியாத அனுபவம். இதற்காக நண்பர் செல்வம் ஐஏஎஸ், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் இருவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது!
--------------------------------------------------------------------------------------------
தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஆஸ்திரேலியாவில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றும் சந்திரிகா சுப்பிரமணியன், தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். கம்பன் குறித்து ஆங்கிலத்தில் ஒரு புத்தகமும், தமிழில் "கம்பனின் காதலும் பக்தியும்' என்கிற தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதி இருக்கும் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர். வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்று தெரிவிக்கிறது புத்தகத்தில் உள்ள அவரது தன்விவரக் குறிப்பு.
கம்பகாதையில் மயங்காதவர் யார் தான் இருந்து விட முடியும்? தமிழில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான புத்தகங்கள் கம்பராமாயணம் குறித்ததாகத் தான் இருக்கக் கூடும். கம்பன் படைத்த ராமகாதையை, அவரவர் பார்வையில் புது விளக்கம் கொடுத்து நூலாக்குவதை வாழ்நாள் சாதனையாகக் கருதும் தமிழ் அறிஞர்கள் பலர் உண்டு.
கம்பன் கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படும் பட்டிமன்றங்களும் ஆய்வரங்கங்களும் இன்னும் கூட அந்த கவிச்சக்கரவர்த்தியின் பரிமாணங்களை முழுமையாக வெளிக்கொணர முடியவில்லை என்பதிலிருந்து, மகாகவி பாரதியார், "கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று அழைத்ததன் காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
கம்பராமாயணத்தை அறம், வீரம், காதல், பக்தி என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். நட்பு, பாசம், உறவு என்று இன்னும் கூடப் பல தலைப்புகளில் கம்பன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.
கம்பனில் காதலும் பக்தியும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்து, அவரைக் கவர்ந்த பாடல்களை மேற்கோள்காட்டி நூல் வடிவம் செய்திருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன்.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் கம்பன் குறித்த உரைகளால் ஈர்க்கப்பட்டு, கம்பனுக்கு அடிமையான எத்தனையோ பேரில் இவரும் ஒருவர் என்பது அவரது என்னுரையைப் படித்தபோது தெரிந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சிட்னி கம்பன் விழாக்களில் கலந்து கொள்வதால் கம்பகாதை குறித்த அவரது புரிதல் பட்டை தீட்டப்பட்டு இருக்கிறது. இதுவரை 53 நூல்களைப் படைத்திருக்கும் சந்திரிகா சுப்பிரமணியன் இதற்கு முன்னால் கம்பகாதை தொடர்பாக 9 நூல்கள் எழுதியுள்ளார்.
கம்பராமாயணப் பட்டிமன்றத்தில் பேச, காதல் குறித்தும் பக்தி குறித்தும் தேர்ந்தெடுத்த சில பாடல்களைப் பட்டியலிட்டுத் தருகிறது இந்த புத்தகம். இளம் பட்டிமன்ற பேச்சாளர்கள் தங்களது சேகரிப்பில் கையேடாக வைத்துக் கொள்ளலாம்.
அ.சுந்தர செல்வனின் துளிப்பா கவிதைத்
தொகுப்பு "காற்றில்
அசைகிறகாலம்'. அதில் இடம் பெற்றிருக்கிறது இந்தக் கவிதை!
அவசரமாகச்
சென்ற பூனை
அரண்டு நின்றது
குறுக்கே மனிதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.