சில நேரங்களில், சில இடங்களில், சில மனிதர்களிடம் 'முடியாது' என்று மறுப்பதுதான் புத்திசாலித்தனம். அன்பு காரணமாகவே நம்மிடம் சிலர் சிலவற்றை வற்புறுத்தலாம். அந்த வற்புறுத்தலுக்கு இணங்கினால், நமக்கு நேரம் வீணாகும்; சிக்கல் வரும் என்பது தெரிந்தே, மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்வோம். பின்னர். 'ஏன்தான் ஒப்புக்கொண்டோமோ...' என்று நம்மை நாமே நொந்து கொள்வோம். எல்லோருக்குமே இப்படி அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
எப்போதோ பழகியவர்கள், இடையில் எந்தத் தொடர்பும் இல்லாது இருப்பவர்கள், திடீரென நம் மீது பாசம் காட்டிப் பேசுவார்கள். நம்மால் ஏதோ காரியம் நடக்க வேண்டியிருக்கும்; அவர்களுக்கான தேவைக்காக நம்மைப் பயன்படுத்திக்கொள்ள, சிரித்தபடி வருவார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். அன்பினால் கேட்டாலும், சுயநலத்துக்காகக் கேட்டாலும், நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதே முக்கியம். எதற்கு
ஒப்புக்கொள்வது; எதற்கு மறுப்பு தெரிவிப்பது என்பதில் தெளிவு நமக்குத்தான் வேண்டும். பல காட்சிகளில், இந்தத் தெளிவின் அவசியத்தை சொல்கிறான் கம்பன்.
இராமனால், 'தீராக்காதலன்' என்று பாராட்டப்பட்டவன் குகன். அவனுடைய அன்புக்கு இணையில்லை. 'நீங்கள் காட்டுக்குப் போகத் தேவையில்லை; எங்களுடனே இருந்துவிடுங்கள்; உங்கள் மூவருக்கும் எந்தச் சிரமும் இல்லாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என்று வற்புறுத்தினான் குகன். மிக்க அன்புடன் அந்த வேண்டுகோளை மறுத்தான் இராமன்.
'அப்படியானால், நான் உங்களுடன் காட்டுக்குள் வருகிறேன். உங்களுடனே இருந்து தொண்டு செய்கிறேன். எந்த விதத்திலும் உங்களுக்கு சிரமம் தரமாட்டேன். மறுக்காமல் அழைத்துச் செல்லுங்கள்' என்று மீண்டும் வற்புறுத்தினான் குகன். அதற்கும் 'முடியாது' என்றே பதில் சொன்னான் இராமன்.
காட்டுக்குள் நுழைந்த அவர்களை, பரத்துவாசர் என்னும் முனிவர் வரவேற்றார். காட்டுக்கு அவர்கள் மூவரும் மரவுரி தரித்து வந்த
காரணத்தைக் கேட்டு வருந்தினார். 'எனது ஆசிரமம் காட்டுக்குள்தானே இருக்கிறது... இங்கேயே நீங்கள் தங்கி, உங்கள் தவ வாழ்க்கையை மேற்கொள்ளலாம்' என்றார் முனிவர்.
'நாட்டின் எல்லைக்கு அருகில் இந்த இடம் உள்ளது. இங்கு தங்கினால், எங்களைக் காண்பதற்காக மக்கள் வரும் வாய்ப்பு அதிகம்; நாங்கள் காட்டின் உள் பகுதிக்குச் செல்ல விரும்புகிறோம்' என்று காரணங்கள் சொல்லி, முடியாது என்று மறுத்துவிட்டான் இராமன்.
தயரதன் மரணத்துக்குப் பின்னர், கானகத்துக்கு இராமனைத் தேடி வந்த பரதன் போன்றோருடன், அரசகுரு வசிட்டரும் வந்தார்.
இராமனுக்கு அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்த ஆசிரியர் அவர். எவர் சொல்லியும் நாடு திரும்ப மறுத்த இராமன், தான் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கையில், 'இராமா.. நீ நாட்டுக்குத் திரும்பி, மன்னனாகப் பொறுப்பேற்கத்தான் வேண்டும்' என்றார். 'தாய் தந்தை சொன்னதன் அடிப்படையில் காட்டுக்கு வந்திருக்கிறேன்; மன்னிக்க வேண்டும்; உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று அவரிடமே மறுத்தான் இராமன்.
தன்னை அரசனாக்குவதற்காக, தாய் கைகேயி உருவாக்கி வைத்திருந்த சூழ்நிலைகளை மீறி, 'முடியாது' என்று தீர்மானமாக, இறுதிவரை நின்றவன் பரதன். அவனுடைய இந்த உறுதியே, 'கோடி இராமர்கள் பரதனுக்கு இணையாக மாட்டார்கள்' என்று கோசலையின் பாராட்டினை அவனுக்குப் பெற்றுத் தந்தது.
சீதையைத் தேடி இலங்கையை நோக்கிக் கடல் மீது பறந்துகொண்டிருந்த அனுமனைத் தடுத்த மைந்நாக மலை, 'உனக்கு விருந்து அளித்து அனுப்ப, இந்திரன் எனக்கு ஆணையிட்டான். அனுமனே... என் மீது இறங்கி, இளைப்பாறி விருந்து உண்டு செல்லவேண்டும்' என்று
அவனைக் கேட்டுக்கொண்டது. மறுத்த அனுமன் பதில் சொன்னதாகக் கம்பன் பாடல்;
'ஈண்டே கடிது ஏகி, இலங்கை விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றி, என் ஆற்றல் கொண்டே,
மீண்டால் நுகர்வென் நின் விருந்து' என வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பின்பட, முன்பு போனான்.
'இலங்கை சென்று, தலைவன் இராமன் எனக்கிட்ட பணியை முடித்து நான் திரும்பினால், உன் விருந்தினை ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்லி மறுத்துவிட்டு, மிக விரைவாகப் போனான்
அனுமன். திரும்பும்போதும் அவன் விருந்துக்குப் போகவில்லை.
இராமனிடம் விரைந்து செல்ல வேண்டிய அவசரம் இருந்தது. வேலைக்கு முன், விருந்து முக்கியமில்லை. தம்மிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள்களை 'முடியாது' என்று மறுத்த காரணத்தாலேயே, மேலே சொன்ன காட்சிகள் அனைத்திலும் நோக்கங்கள் நிறைவேறின.
'நிகழ்பவனவற்றை உணர்ந்து, முடியாது என்று சொல்லப் பழகிக்கொள்ளுங்கள்; வெற்றி பெறுவீர்கள்!' என்கிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.