முகப்பு
தமிழ்மணி

கம்பனின் தமிழமுதம் - 35: பணியாளர் பணி!

வீடுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு.

Updated On : 9 மார்ச், 2025 at 5:43 PM
கம்பர்
பகிர்:
Updated On : 9 மார்ச், 2025 at 5:42 PM

வீடுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு. சொன்னதைச் செய்து முடிப்பதுடன், சொல்லாத வேலை ஒன்றின் அவசியத்தை, சூழல்களை எண்ணிப் பார்த்து செய்யும் பணியாள் ஒருவன் கிடைத்தால் அது வரம். அப்படிப்பட்ட பணியாளன் ஒருவனை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.

இலங்கையில் போர் முடிந்துவிட்டது. எல்லோரும் நாடு திரும்ப வேண்டும். ஆனால், உடனே திரும்பவேண்டிய காரணம் ஒன்று இருந்தது. அன்றுடன்

இராமன் கானகத்துக்குக் கிளம்பி வந்து 14 ஆண்டுகள் முடிகின்றன. '14 ஆண்டுகளில் நீ திரும்பி வரவில்லையெனில், நான் தீயில் புகுந்து உயிர் துறப்பேன்' என்று உறுதியாக சொல்லியிருந்தான் பரதன்.

Advertisement

வீடணன் ஏற்பாடு செய்த விமானம் ஒன்றில் அனைவரும் கிளம்பினார்கள். ஆனால், வழியில் இருந்த பரத்துவாச முனிவரைப் பார்க்காமல் செல்ல முடியாது. எனவே அவரது ஆசிரமத்தில் விமானம் இறங்கியது. பரத்துவாச முனிவர், 'சாப்பிடாமல் போகக்கூடாது' என்று கண்டிப்புடன் சொன்னார்.

இராமனுக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவர் சொற்களை மீற முடியவில்லை; ஆனால், அங்கே பரதன் நெருப்புக்குள் இறங்க ஏற்பாடுகள் செய்திருப்பான். என்னதான் செய்வது? அனுமனை அழைத்தான். 'அனுமனே! நீ நேராக அயோத்திக்கு விரைந்து போ. பரதன் தீக்குள் இறங்கி உயிர் துறக்கத் தயாராக இருப்பான்.

நான் வந்துகொண்டேயிருக்கிறேன் என்பதைச் சொல்லி அவனைக் காப்பாற்று' என்று சொல்லி, அடையாளத்துக்குத் தனது மோதிரத்தைக் கொடுத்து அனுப்பினான். அவசரத்தை உணர்ந்துகொண்ட அனுமன் விண்ணில் ஏறி மிக வேகமாகப் பறந்தான். அந்த வேகத்தைக் கம்பன் ஒரு பாடலில் அழகாக விளக்குகிறான்.

அனுமனின் தந்தை வாயுதேவன். காற்றின் மகனான அனுமன், தனது தந்தையின் வேகத்தைவிட வேகமாகச் சென்றான். பொதுவாகவே, வில்லில் இருந்து கிளம்பும் அம்பு வேகமாகச் செல்லக்கூடியது. அனுமனின் தலைவனான இராமனின் அம்பு மிக வேகமாகச் செல்லும். இராமன் வில்லில் இருந்து கிளம்பும் அம்பு பின்னால் வரும்படி, அதற்கும் முன்னால் செல்வதுபோல் மிக வேகமாகச் சென்றான் அனுமன். மூன்றாவதாகக் கம்பன் சொன்னது அவனுக்கேயான கற்பனை. அனுமன் சென்ற வேகத்துக்குப் பயணிக்க முடியாமல், அவனது மனமே அவனுக்குப் பின்னால் ஓடி வந்ததாம். இவையெல்லாம் அந்தப் பாடலில் இருந்த நயங்கள்.

Updated On : 9 மார்ச், 2025 at 5:43 PM

நாம் இங்கு பார்க்க இருக்கும் கருத்து, பாடலின் கடைசி வரியில்தான் இருக்கிறது. பறந்துகொண்டே இருந்தாலும், அனுமன் மனதில் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தன. குகனின் நினைவும் வந்தது. 'குகனுக்கு இராமன் வந்த செய்தியே தெரியாதே; அவர் எப்படி வருவார்? அவர் வரவேண்டும் என்று இராமனே விரும்புவாரே... என்ன செய்வது?' என்ற சிந்தனை ஓடியது. குகன் இருக்கும் கங்கைக்கரையைக் கடந்துதான் தான் செல்லவேண்டும் என்ற நினைவும் அனுமனுக்கு வந்தது.

'குகனிடம் சொல்லிவிட்டுப்போ' என்று இராமன் சொல்லவில்லைதான். ஆனால் குகன் வராமல், இராமன் மனம் நிறைவடையாது என்று நினைத்தவன் உடனே ஒரு முடிவெடுத்தான். கங்கைக்கு மேல் பறந்தபோது, ஒரு கணத்தில் கரையில் இறங்கி, 'குகன், இராமன் வந்தாயிற்று' என்று அவனுக்கு சொல்லிவிட்டு, அதே வேகத்தில் விண்ணுக்குச் சென்று பறந்தான்; உரிய நேரத்தில்

பரதன் தீக்குளிப்பதையும் தடுத்தான். பாடலைப் பார்க்கலாம்.

தந்தை வேகமும், தனது நாயகன்

தனிச் சிலையின்

முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,

சிந்தை பின் வரச் செல்பவன்,

குகற்கும் அச் சேயோன்

வந்த வாசகம், கூறி, மேல் வான்

வழிப் போனான்.

அனுமனுக்கு இடப்பட்ட பணி, பரதனிடம் சொல்வதுமட்டும்தான். குகனுக்கும் சொல்லவேண்டும் என்பது அவனுக்கான வேலை அல்ல. ஆனால் சூழலும் தேவையும் அறிந்து வேலையைச் செய்துமுடிக்கும் பணியாளாக ஆற்றல்மிகு அனுமனைக் காட்டுகிறான் கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.