'தெய்வம் என்றால் அது தெய்வம்; அது சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை' என்பன, எல்லோரும் அறிந்த கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள். "ஒன்று, இருக்கிறது என்பதும் உண்மை; அதுவே இல்லை என்பதும் உண்மை' என்பது, நடைமுறை வாழ்க்கைக்கு முரணானது.
'இருக்குதா...? இல்லையா...? ஏதாவது ஒன்றைச் சொல்' என்றுதான் நீதிமன்றமும் கேட்கும்! ஆனால், இறை நம்பிக்கை என்பது வேறு. "ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!' என்கிறார் மாணிக்கவாசகர். "இறைவன் ஒருவனாகவும் இருக்கிறான்; அவனே பலராகவும் இருக்கிறான்' என்பதெல்லாம் இறை நம்பிக்கை சார்ந்தது.
நம்பிக்கைகளுக்குள் போய்விட்டால், அங்கு கேள்விகள் கிடையாது. குறிப்பிட்ட கடவுளை மட்டுமே வணங்குபவர்கள் உண்டு; குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டும் தவறாமல் போய் வழிபடுபவர்கள் உண்டு. மத நம்பிக்கைகளைத் தாண்டி, எல்லா கடவுளரையும் வணங்குபவர்களும் உண்டு. இவை அனைத்துமே, தனி நபர்களின் நம்பிக்கை சார்ந்த விருப்பங்கள்.
"அரக்கர்களை அழிப்பதற்காக திருமால், தயரதனுக்கு மகனாக மண்ணில் பிறந்தார்' என்பதே இராம அவதாரம். கம்பனும் தனது காப்பியத்தை அப்படித்தான் தொடங்குகிறான். "எனக்குப் பின்னால் இந்த நாட்டை யார் காப்பாற்றுவார்கள் என்ற கவலை என்னை வாட்டுகிறது' என்று தயரதன் வசிட்டரிடம் தனது கவலையைத் தெரிவிக்க, தயரதனுக்கு மகனாக திருமால் பிறக்க உறுதிகொண்டிருப்பதை தனது ஞானத்தால் உணர்ந்திருந்த வசிட்டர், கலைக்கோட்டு முனிவரைக் கொண்டு குழந்தைப் பிறப்புக்கான யாகத்தைச் செய்ய, அதன் பயனாக குழந்தைகள் பிறந்ததாகக் கதை நகர்கிறது. கம்பன் தனது படைப்புக்கு வைத்த பெயர் "இராமாவதாரம்'.
மனிதனாக இராமன் பிறந்து வாழ்ந்தாலும், பல இடங்களில் இராமன் தெய்வம்தான் என்றும் கம்பன் பதிவு செய்து கொண்டே போகிறான். திருமாலின் அவதாரமான இராமனைப் பற்றிப் பேசும் காப்பியம்தான் எனினும், சிவனின் பெருமைகளையும், பிரம்மாவின் பெருமைகளையும் ஆங்காங்கே பதிவு செய்கிறான் கம்பன். அதனினும் வியப்பு, "என் கடவுள்தான் பெரியவர்' என்று மனிதர்கள் முரண்பட்டு நிற்பதையும் கடுமையாகச் சாடுகிறான்.
"அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்' என்பது கம்பனின் வரி. "கடவுளுக்காக சண்டை போட்டுக்கொள்பவர், அறிவில்லாதவர்' என்று, இராமனின் அவதாரத்தைச் சொல்லும் காப்பியத்தில் கம்பன் சொல்வது, அவனது நடுநிலையான சிந்தனையின் வெளிப்பாடு.
இதைவிட வியப்பளிக்கும் கருத்து ஒன்று உண்டு. எந்த ஒரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரும் கடவுள் வாழ்த்து சொல்வது மரபு. கவிஞர்களின் மரபுப்படி, தனது ஆறு காண்டங்களுக்கும் தனித்தனியே கடவுள் வாழ்த்து எழுதியுள்ளான் கம்பன். யுத்த காண்டத்தின் தொடக்கத்தில் உள்ள கடவுள் வாழ்த்து இந்தப் பாடல்.
ஒன்றே என்னின் ஒன்றேயாம்;
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்;
ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்;
உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை;
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
"இறைவன் ஒருவனே என்று நம்பினால், அவன் ஒருவனே; இறைவன் பலவாக இருக்கிறான் என்று நம்பினால், பலவாகத்தான் இருக்கிறான். இறைவன் இப்படிப்பட்டவன் என்று கூற முடியாது என்பதும் உண்மை; அப்படிக் கூற முடியும் என்பதும் உண்மை. இறைவன் என்று ஒருவன் இல்லவே இல்லை என்றால், அவன் இல்லைதான்.
இறைவன் இருக்கிறான் என்றால், அவன் இருக்கிறான். அந்த இறைவனின் நிலை பெரியது; அவனை அறிந்துகொண்டு உய்வது எவ்வாறு?' என்பதே பாடலின் சுருக்கமான கருத்து. "இறைவன் பெயரால் வேறுபட்டு ஏன் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்...?' என்று இந்தப் பாடலின் வழி, கம்பன் நம்மிடம் கேட்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.