குடும்பப் பிரச்னை தீர்க்கும்: அருள்மிகு இலஞ்சி குமாரர் திருக்கோயில்
மூன்று மலைகள் கூடும் திரிகூட மலை. அங்கே மூன்று தேவர்களின் அம்சம் பொருந்தியவர்களாக மூன்று முனிவர்கள். ஒருவர், பிரம்மபுத்திரர் காச்யப முனிவர். மற்றொருவர் திருமாலின் அம்சமாய் அவதரித்த கபில மகரிஷி. இன்னொர
மூன்று மலைகள் கூடும் திரிகூட மலை. அங்கே மூன்று தேவர்களின் அம்சம் பொருந்தியவர்களாக மூன்று முனிவர்கள். ஒருவர், பிரம்மபுத்திரர் காச்யப முனிவர். மற்றொருவர் திருமாலின் அம்சமாய் அவதரித்த கபில மகரிஷி. இன்னொருவர் ருத்ர அம்சமாக அவதரித்த துர்வாச முனிவர். மூவரும் அந்தத் திரிகூடமலை அடிவாரத்தே ஒருங்கே கூடி தத்துவ விசாரம் செய்தனர்.
இந்த உலகம் எதனால் ஆனது? உலகம் மாயையா? காண்பது எத்தகையது? மூலப் பொருள் என்ன? இல்லாத பொருளா அல்லது உள்ள பொருளா? இவ்வாறெல்லாம் அவர்களுக்குள் விவாதம் நடந்தது. சாங்கியத் தத்துவம் கற்பித்த கபிலரோ "இந்த உலகம் இல்பொருளால்' ஆனது என்றார். காச்யபரும் துர்வாசரும் அதனை மறுத்து "உள்ள பொருளால் ஆன உலகம் இது' என்றனர்.
"ஆக்கல், காத்தல், அழித்தல் முத்தொழிலும் புரியும் கடவுளர் இன்றி இல்பொருள் எங்கனம் தோன்றும்?' என்று வாதிட்டனர். அவர்களின் கருத்தை ஏற்ற கபிலர், "அப்படியாயின் முத்தொழில் புரியும் தேவர்களில் சிறந்தவர் யார்? அவர்களில் உண்மைப் பொருளாக, தத்துவமாகத் திகழ்பவர் யார்?' என்று கேட்டார். விவாதம் சூடு பிடித்தது. கபிலர் "உண்மைப் பரம்பொருள் திருமால்' என்றார். பிரம்ம குமாரரான காச்யபரோ "இல்லை இல்லை பிரம்மாவே' என்றார். ருத்ராம்சரான துர்வாசரோ, "சிவபெருமானே பரம்பொருள்' என்றார். விவாதம் நீண்டது. முடிவு ஒன்றும் தெரியவில்லை. இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, பிரணவ மந்திரப் பொருளுரைத்து அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பிரமணியரை நாடுவது என்று மூவரும் முடிவு செய்தனர்.
மூவரின் விருப்பத்துக்கு இணங்கி அங்கே முருகப் பெருமான் காட்சி அளித்தார். இளமை ததும்பும் கோலத்தில் அழகனாகத் தோன்றிய முருகப் பெருமான், அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு தரும் வண்ணம், "யாமே விதியாக நின்று படைப்போம், யாமே காப்போம், யாமே அழிப்போம். முத்தொழிலுக்கும் உரியவர் யாமே' என்று மூன்று வினைகளையும் புரிகின்ற மும்மூர்த்தியாக அவர்களிடம் தம்மைக் காட்டி நின்றார். இனி இத்தகைய விவாதங்களில் ஈடுபடாது, பரம்பொருளில் ஒன்றிவிட வழிசொன்னார். முக்காலமும் யானே என முருகப் பெருமான் உணர்த்தியது கண்டு அவரை வணங்கிய முனிவர்கள், முருகப் பெருமானிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள். குழப்பத்தில் ஆழ்ந்த தங்களுக்கு முருகன் அருள் புரிந்து குழப்பத்தை நீக்கியதுபோல், இந்த இடத்தே கோயில் கொண்டு பெருமானைத் தரிசிக்க வரும் பக்தர்க்கெல்லாம் அருளை வாரி வழங்கி, ஞானமும் செல்வமும் அருளும் பொருளும் அளித்திட வேண்டுமாய்ப் பிரார்த்தனை செய்தார்கள். முனிவர்கள் மூவரின் கருத்தைச் செவிமடுத்த முருகனார் இங்கே பால சுப்ரமணியனாக இளமை ததும்பும் கோலத்தில் எழுந்
தருளினார்.
அதுமுதல் இங்கே முருகப் பெருமான் இலஞ்சிக் குமரனாக கோயில் கொண்டார். இந்த ஊரும் குமாரகோவில் என்றே பெயர் பெற்றது.
குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது கோயில். பிரதான சாலையில் இருந்து பார்த்தாலே கோயில் தெரிகிறது. சிற்றாற்று நீரின் சலசலக்கும் சத்தம் கோயிலைச் சுற்றிலும் கேட்கிறது. இதுவே இங்கு தலதீர்த்தம். பொதிகைத் தென்றல் வீசும் மலையடிவாரப் பகுதி. கோயிலின் உள்ளே வாசம் வீசும் மகிழ மரம் தல விருட்சமாகத் திகழ்கிறது.
கோயிலின் முகப்பில் தேரடி அடுத்து சிறிய மண்டபம். உள்ளே சென்றால் கோபுரமும் மண்டபமும் அழகிய வேலைப்பாடுள்ள தூண்களுடன் திகழ்கிறது.
பிரார்த்தனை: வள்ளி-தெய்வானையுடன் முருகன், விநாயகர், வேணுகோபாலன், காசி விஸ்வநாதர், அகத்தியர், ஐயனார் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. சனீஸ்வரருக்கும் சண்டிகேச்வரருக்கும் பைரவருக்கும் வடக்கே சந்நிதிகள் உள்ளன. இந்தத் தலத்தின் கருவறை தனிச் சிறப்பு பெற்றது. கருவறையில் தெற்கு-வடக்குப் பகுதிகளில் இரண்டு சந்நிதிகள். ஒன்றில் தென் பகுதி சந்நிதியில் முருகப் பெருமான் வள்ளி - தெய்வானையுடன் உள்ளார். வடக்குப் பகுதி சந்நிதியில் அம்மை அப்பனுடன் சேர்ந்து. (அதாவது அகத்தியரால் மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவனாக இருவாலுகநாயகராகவும், உமையாள் இருவாலுக ஈசர்க்கினியாளாகவும்) அருள் புரிகின்றார். எனவே இங்கே முருகப் பெருமானை வணங்கினால் குடும்பப் பிரச்னைகள் தீரும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது வழி வழி நம்பிக்கை. இங்கே குமரனைத் துதித்து வணங்கியவர்க்கு அவன் அருள் புரிந்த கதைகள் பல உண்டு.
இந்தக் குமாரகோயிலுக்கு மாறவர்மன் குலசேகர பாண்டியன் திருப்பணிகள் பல செய்துள்ளார். கட்டிளமைக் கோலத்தில் அருள்புரியும் குமரனுக்கு தோசை, அப்பம், வடை நிவேதனம் செய்யப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனும் இந்தக் குமாரரை வணங்கி அருள்பெற்றுள்ளனர். இவரை அருணகிரி நாதர் தம் திருப்புகழ் கொண்டு பாடிச் சிறப்பித்துள்ளார். மேலும், அருகே கோயில் கொண்டுள்ள வரதராஜப் பெருமாளையும் தம் பாடலில் பாடிச் சிறப்பித்துள்ளார்.
அகத்தியர் பிடித்த லிங்கம்: இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பு அகத்தியர் பிடித்து வைத்த வெண்மணல் லிங்கம். ஒரு முறை அகத்தியர் கயிலாய திருமணக் காட்சி காண தென் திசை நோக்கி வந்தார். அப்போது, திருக்குற்றாலம் கோயிலுக்குச் சென்றார். அங்கே திருமாலின் கோயில் திகழ்ந்தது. தாம் விரும்பிய சிவபெருமானை வணங்க யாது வழி என்று யோசித்த போது, குமரனை வணங்கினார். அவர் தன் கோயிலைக் காட்டி, இங்கே வந்து வழிபடுமாறு கூறினார். அதன்படி, குமரனின் சந்நிதிக்கு வந்த அகத்தியர், சிற்றாற்றின் கரையில் குமரப் பெருமானுக்கு அருகிலேயே வெண்மணல் எடுத்து லிங்கம் அமைத்து பூஜை செய்தார். அவ்வாறு அமையப் பெற்ற லிங்க மூர்த்தியே இருவாலுக நாயகராக அருள் பாலிக்கின்றார். அதன்பின்னர் அகத்தியர் குற்றாலம் கோயிலுக்குச் சென்று அதை சிவத் தலமாக மாற்றியதாக கோயில் புராணம் கூறும்.
விழாக்கள்: ஆண்டுதோறும் இங்கே ஐப்பசி மாதம் தாமே பரம்பொருள் என்பதை உணர்த்தும் விதமாக, கந்தசஷ்டி விழா ஆறு நாட்களுக்கு நடைபெறுகின்றது. சித்திரையில் சித்திரை நட்சத்திரத்தில் தொடங்கி சித்திரைவிழா பத்து நாட்கள் நடக்கிறது. மேலும், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஆவணி பவித்ர உற்ஸவம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி ஆகிய விழாக்களும் கோலாகலமாக நடக்கின்றன. முருகப் பெருமானின் அபிஷேகத்துக்குத் தேவையான பால் இங்கே வசிக்கும் பக்தர்களிடம் இருந்தே சேகரிக்கப்படுகிறது.
நேர்த்திக் கடன்: முடிக்காணிக்கை செலுத்துதல், பால் அபிஷேகம் மற்றும் விசேஷ அர்ச்சனை, ஆராதனைகள், காவடி எடுத்தல் உள்ளிட்டவை பக்தர்களால் நிறைவேற்றப் படுகின்றன. குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் குழந்தைகளைத் தத்து கொடுத்து வாங்கி, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்து
கின்றனர்.
தரிசன நேரம்: காலை 6-12, மாலை 4.30-8.00 மணி வரை.
தகவலுக்கு: 04633-283201, 223029