வெள்ளிமணி

அக்னி நட்சத்திரம்!

DIN

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் என நம் சனாதன தர்மம் கூறுகிறது. தென் இந்தியாவில் மட்டுமே சித்திரை வருடப்பிறப்பன்று பஞ்சாங்கம் வெளியிடுவது என்பது புழக்கத்தில் உள்ளது. சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் இருக்கின்றதோ அந்த இடத்திற்குரிய நட்சத்திரம் நடப்பதாக பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த சந்திரனின் சஞ்சாரம் மொத்தம் 24 நாட்கள்; மிக அதிகமாக வெப்பம் இருக்கும் காலமாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை நாலாம் பாதத்தில் தொடங்கி ரோகிணி முதல் பாதம் வரை சூரியனார் சஞ்சாரம் செய்யும் காலத்தையே "அக்னி நட்சத்திரம்' என்றும்; பேச்சு வழக்கில் "கத்திரி' என்றும் கூறுவர்.
 இந்த காலத்தில் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை மிக விரிவாக வராஹ மிஹிரர் என்ற ஜோதிட சாஸ்திரத்தை வகுத்த பிதாமஹர் கூறியுள்ளார். இந்த காலத்தில் சிலர் சுபகாரியங்கள் எதுவுமே செய்யக்கூடாது என்ற தவறான விளக்கம் சொல்கிறார்கள். திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் போன்றவை செய்வதில் எந்த தவறும் இல்லை; சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தை, அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம் என்றும் கூறுகிறார்.
 முன்னாளில்; ஆடியில் கர்ப்பம் தரித்தால் சித்திரையில் பிரசவம் நடைபெறும் என்பதால்; வெயில் காலத்தில் நடைபெறும் பிரசவம், தாய்க்கு பல உபாதைகள், நோய் தொற்று போன்ற சங்கடங்கள் ஏற்படுமென்பதால்; ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரித்து வைத்தனர்.
 இந்தக் காலத்தை ஜோதிடர்கள் தோஷ காலமாக குறிப்பிடுகின்றனர். கிராமங்களில் உள்ள கோயில்களில், முக்கியமாக மாரியம்மன் கோயில்களில் அக்னி கழிவு என்றும்; கொடை விழா என்றும் முடியும் நாளில்; ஊரிலுள்ளோர் அனைவரும் அம்மை போடாமல் இருந்ததற்கு நன்றி கூறும் முகமாக; சிறப்பு பூஜை செய்து; பொங்கல் வைத்து படைப்பார்கள். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் மிகாமல் இருப்பதற்கு வேண்டிய விரதம் இருந்து பால் குடம், தீச்சட்டி ஏந்துதல், பூமிதித்தல் போன்ற அம்மனுக்கு உகந்த தெய்வ வழிபாட்டினை பக்தர்கள் செய்கிறார்கள்.
 இதில் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்ட வேப்பிலை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
 தென் மாநிலங்களில் இதற்கு கொடுக்கும் முக்கியத்தைப் போல் வடமாநிலங்களில் அவ்வளவாக கொடுப்பதில்லை; ஏனெனில் அங்கு வெயில், மழை, குளிர் எல்லாமே மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் தட்ப வெப்பம் எல்லாமே சீராக இருப்பதால், இந்த குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் உக்ரமான கடும் வெய்யிலின் தாக்கம் மக்களை மிரள வைப்பதால்; இதனை, "அக்னி நட்சத்திர' நாள்களாக கணித்துள்ளார்கள். இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4 -ஆம் தேதி சனிக்கிழமை ஆரம்பித்து மே மாதம் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிவர்த்தியாகிறது.
 - எஸ். எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT