வெள்ளிமணி

ஆரோக்கியம் அருளும் ஆஞ்சநேயர்!

இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரம் லட்சுமணன் உட்பட ஸ்ரீ ராமனின் படைகள் முழுவதையும் வீழ்த்திவிட்டது.

இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்


இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரம் லட்சுமணன் உட்பட ஸ்ரீ ராமனின் படைகள் முழுவதையும் வீழ்த்திவிட்டது. அச்சமயம் விபீஷணன், ஜாம்பவான் இருவரும் வழிகாட்ட அனுமன், இமயமலையிலுள்ள சஞ்சீவி மூலிகைகளை எடுத்துவரப் புறப்பட்டார். பல்வேறு தடைகளைக் கடந்து சென்றபோது மலையில் உள்ள மூலிகைகளின் பெயர்கள் மறந்து போக, சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்து லஷ்மணன் மற்றும் ஸ்ரீ ராமனின் படைகள் அத்தனையையும் மீண்டும் உயிர்ப்பித்தார் என்பது நமது இதிகாசமான ராமாயணம் காட்டும் வரலாறு.

அன்று அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மூலிகளைகளை தன் இடுப்பில் செருகிய வண்ணம் இன்றும் காட்சியளிக்கும் அற்புதத்தலமே, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருவோணமங்கலத்தில் உள்ள ஞானபுரீ சித்திரக் கூடத் திருத்தலம் ஆகும். இங்குதான் 33 அடி உயரத்தில் கூப்பிய கரங்களுடன், புன்னகையுடன் தாமரை மலரின் மீது கிழக்கு நோக்கி, நின்ற வண்ணம் அருள்பாலிக்கிறார் சங்கடஹர  மங்கல மாருதி.    

சென்னை நங்கநல்லூரிலும், பாண்டிச்சேரி அருகிலுள்ள பஞ்சவடியிலும் விச்வரூப ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்த, ஸ்ரீ ரமணி அண்ணா, இவ்வூரிலும் அவ்வாறு ஓர் ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்ய விரும்ப, அப்பொழுது அவர் கனவில் தோன்றிய  ஆஞ்சநேயர், தனது உருவத்தில்,  தான் இமயமலையிலிருந்து கொணர்ந்த மிருத சஞ்சீவினி, சந்தான கரணீ, விஷல்ய கரணீ, சாவர்ண்ய கரணீ ஆகிய சஞ்சீவி மூலிகைகளை இடது பக்கம் தனது இடுப்பில் செருகிய வண்ணம் இருப்பது போல் அமைக்க அருளாணையிட, அதன்படியே அத்திருவுருவை உருவாக்க அமர்த்தப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்தபதியிடம் அந்த விவரங்களைக் கூறினார். 

ஆனால் அந்த ஸ்தபதிக்கு அந்த மூலிகைகளைப் பற்றித் தெரியாது. ஆனால் அவர் மகன் மீனாட்சிசுந்தர ஸ்தபதிக்கு கனவில் அந்த மூலிகைகளின் வடிவம் தோன்ற, உடனே அதைக் குறித்து வைத்துக் கொண்டு அற்புதமாக 33 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவுருவை செதுக்கி வைத்தார். 

இந்த அற்புத மூலிகைகளைப் பற்றி கம்பராமாயணத்தில் ஜாம்பவான் அனுமனிடம் இதுபற்றிக் கூறுவதான பாடல், யுத்த காண்டம் மருந்து மலைப் படலத்தில் வருகின்றது.  உடம்பில் உள்ள அம்புகளை அகற்றுவதற்கான மூலிகை விசலியகரணீ. உடைந்த உறுப்புக்களைப் பொருத்துவது சந்தான கரணீ. இன்று உள்ள பிளாஸ்டிக் சர்ஜரி போன்று படைக் கலன்களால் கிழிந்த சதைகளை ஒன்று சேர்த்து, மேல் தோலை மேவச் செய்து பழைய நிறத்தை தருவது சாவர்ணய கரணீ. எல்லாவற்றுக்கும் மேலாக இறந்தவர்களையே மீண்டும் உயிர் பெறச் செய்வது மிருத சஞ்சீவினி ஆகிய நான்கு அபூர்வ மூலிகைகளை இந்த ஆஞ்சநேயர் தனது இடுப்பில் செருகிக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ ரமணி அண்ணா, இந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலின் திருப்பணி செய்து வரும் வேளையில் அதில் தொய்வு ஏற்பட, அதன் காரணத்தை அறிய  பிரசனம் பார்க்க, அதில் அவ்விடத்தில் ஒரு சிறந்த குருபீடம் அமையப் போகிறதென்றும் அதன் பின்னர், திருப்பணிகள் பூர்த்தியாகுமென்றும் வர, அதன்படியே ஸ்ரீ ஆஞ்சநேய பகவான் பேரருளால் ஜகத்குரு பதரி ஸ்ரீúக்ஷத்ர சகடபுர ஸ்ரீ வித்யாபீடாதீஸ்வர ஸ்ரீ வித்யாயிநவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள் அதன் பொறுப்பை ஏற்று, திருப்பணிகளைப் பூர்த்தி செய்து கடந்த 2020, பிப்ரவரி 7 -ஆம் நாள், சொர்ணபந்தன மகாகும்பாபிஷேகம் செய்து அருளினார்கள்.    நெடிதுயர்ந்த சங்கடஹர ஸ்ரீ மங்கலமாருதி சந்நிதிக்கு வலது புறம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியும், இடதுபுறம் ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமன் சமேத ஸ்ரீ கோதண்டராமர் சந்நிதியும் அருள்பாலிக்கின்றன. தற்போது கொரோனா என்னும் கொடிய நோய் உலகையே அச்சுறுத்தும் சூழலில் சஞ்சீவினி மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கும் சங்கடஹர ஸ்ரீ மங்கலமாருதியான ஸ்ரீ ஆஞ்சநேய பகவானை வீட்டில் இருந்தபடியே மனத்தால் போற்றி வணங்குவோம். 

ராம ராவண யுத்தத்தில் சஞ்சீவி மலையைக் கொணர்ந்து அனைவரையும் உயிரெழுப்பிக் காப்பாற்றிய ஆஞ்சநேய பகவான் இந்த நெருக்கடியான சூழலில் இந்த உலகமெங்கும் தவிக்கும் மக்களை தனது அருட்பார்வையால் நிச்சயம் காப்பாற்றி அருள்பாலிப்பார் என்ற திட நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம். இந்த இன்னல் தீர்ந்ததும் நேரில் சென்று அவரைத் தரிசிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT