முகப்பு
உலகம்

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகள்: பிரதமர் மோடி

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

உலகம்

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகள்: பிரதமர் மோடி

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் தேயிலை உற்பத்திக்குப் புகழ்பெற்ற இடமாகவும், அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றாகவும் திகழும் பகுதியான மத்திய மாகாணத்திலுள்ள திகோயாவுக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பன்முகத்தன்மை என்பது கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறதே தவிர, மோதல் போக்குக்கு அழைப்பு விடுக்கவில்லை. சிங்களர், தமிழர் மற்றும் பிற மொழிகள் பேசும் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். நம்மை வலுப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதே தவிர, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கு மாறாக பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
இலங்கையில் வாழும் சிங்களர்கள், தமிழர்கள் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரான தமிழர்களின் வாழ்வாதார நிலைகளை மேம்படுத்த இலங்கை அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும். அமைதி மற்றும் வளர்ச்சி நோக்கிய உங்களது பயணத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். இந்தப் பிராந்தியத்தில் ஏற்கெனவே 4 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இதுபோல், மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும். தற்போது இலங்கையின் மேற்கு, தெற்கு மாகாணங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
இங்கிருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கும், எனக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. தேயிலையுடன் எனக்கு சிறப்பான தொடர்பு உண்டு (அரசியலுக்கு வருவதற்கு முன்பு தேநீர் விற்பனை செய்ததை நினைவுகூர்ந்தார்).
தமிழ்மக்கள் இந்த உலகத்துக்கு உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனையும், எம்ஜிஆரையும் (மறைந்த தமிழக முதல்வர்) பரிசாக அளித்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைத் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்.
அந்நகரில் இந்தியாவின் நிதியுதவியுடன் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்டி கோயிலில் வழிபாடு: பின்னர் கண்டியில் உள்ள புத்தரின் பல்லின் சிறிய பகுதி வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதாலடா மலிகாவா கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
சர்வதேச விசாக தின கொண்டாட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்: இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாக தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தெற்காசிய பிராந்தியத்தில் வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தங்கள், அதன் ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை மூடிவிட்டனர். அதற்குப் பதிலாக, மரணம் மற்றும் அழிவைத் தரும் வாய்ப்பை திறந்துவிட்டுள்ளனர். அழிவு உணர்ச்சிக்கு, தெற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தலே தெளிவான சான்றாகும் (பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதை மறைமுகமாக குற்றம்சாட்டினார்).
அமைதியை போதிக்கும் பௌத்த மதத்தின் போதனைகளைப் பின்பற்றினால், உலகில் வேகமாக பரவும் வன்முறைக்கு விடைகாணலாம் என்பது எனது நம்பிக்கை. நெருங்கிய அண்டை நாடுகள் என்ற முறையில், இந்தியா-இலங்கைக்கு இடையேயான நட்புணர்வு பல்வேறு நிலைகளிலும் பரந்து விரிந்துள்ளது. இலங்கை சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், பொருளாதார ரீதியில் வளமடைய வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாகும். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும்.
இலங்கையின் நண்பனாகவும், கூட்டாளியாகவும் இந்தியா திகழ்கிறது. இலங்கை தனது இலட்சியங்களை அடைவதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →