முகப்பு
உலகம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியுள்ள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியுள்ள்ளது. 

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் முன்னாள் அதிபர் ராஜபட்சவை அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி நியமித்தார். அப்போதிலிருந்து, இலங்கை அரசியலில் நாள்தோறும் அதிரடி திருப்பங்களும், குழப்பங்களும் ஏற்பட்டு வந்தன.

நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக சிறீசேனா அறிவித்தார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்த இலங்கை உச்சநீதிமன்றம், தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கியது.

ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜபட்ச பிரதமராகச் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜபட்ச மனு தாக்கல் செய்தார்.

அதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டி, ரணில் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புதனன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி பெற்றுள்ளார்.  இது அந்நாட்டு அதிபர் சிறீசேனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியுள்ள்ளது. 

இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 அமைப்புகள் தொடந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் வியாழன்று ஒருமித்த தீர்ப்பு வழங்கினார். அதில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் சாசனத்திற்கு விரோதம் என்றும், அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவின் உத்தரவு செல்லாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.