முதல்முறையாக ஆப்கன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றடைந்தார்.
அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றடைந்தார்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முடிவுபெறாத நிலையில் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை காபூலுக்கு வந்தடைந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இம்ரான் கான் ஆப்கானிஸ்தானுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டின் ஜனவரி மாத மத்தியில் குறைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்த நிலையில் இம்ரான்கானின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
"பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவ இருதரப்பு உறவுகள், அமைதிக்கான செயல்முறை மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்" என்று பாக்கிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தாவா கான் மினபால், “இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். எனினும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.