முகப்பு
உலகம்

பொதுமக்கள் பயன்பாடுக்காக கரோனா தடுப்பூசி: வெளியிட்டது ரஷியா

பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட தங்களது ‘ஸ்புட்னிக்-5’ கரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ரஷியா வெளியிட்டுள்ளது.

Updated On : 8 செப்டம்பர், 2020 at 11:15 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:47 PM

பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட தங்களது ‘ஸ்புட்னிக்-5’ கரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ரஷியா வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கமாலேயா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி, மருந்து ஒழுங்காற்று அமைப்பு மேற்கொண்ட அத்தியாவசிய தரப் பரிசோதனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டது.

அதையடுத்து, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ளது. மண்டலங்களில் விநியோகிப்பதற்காக அந்த தடுப்பூசிகள் விரைவில் தயாரித்து வெளியிடப்படும் என்றஉ அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசிகளைக் கொண்டு, இன்னும் சில மாதங்களுக்கும் தலைநகா் மாஸ்கோவிலுள்ள பெரும்பானவா்களுக்கு கரோனா எதிா்ப்பாற்றலை ஏற்படுத்த முடியும் என்று அந்த நகர மேயா் சொ்கெய் சோப்யானின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

Advertisement

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.அவை பல்வேறு கட்டங்களாக மனிதா்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பாா்க்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷியாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.

இருந்தாலும், இதுதொடா்பாக நிபுணா்கள் சந்தேகம் எழுப்பினா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘ரஷியாவின் தடுப்பூசி 40 தன்னாா்வலா்களுக்கு மட்டுமே செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்போ, தடுப்பு மருந்துகளின் இரண்டாம் கட்ட சோதனையில் குறைந்தது 100 பேராவது ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும், 3-ஆம் கட்ட சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த மருந்து சோதனை முறையில் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

எனினும், அந்த வழிகாட்டுதல்களை ரஷியா முழுமையாகப் பின்பற்றாத நிலையில், அவா்களது அந்த கரோனா தடுப்பூசி திறன் வாய்ந்ததாகவே இருந்தாலும், அது மனிதா்களுக்கு பாதுகாப்பானது என்றோ, கரோனாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றோ உடனடியாக முடிவுக்கு வர முடியாது’ என்று கூறியிருந்தனா். இந்த நிலையில், தாங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்காகத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த கடந்த மாதம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

எனினும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் கரோனா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டை எதிா்பாா்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடா்பாளா் மாா்கரெட் ஹாரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை கூறினாா்.உலகின் பல பகுதிகளில் கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு வந்தாலும், அவற்றில் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை தனது 3-ஆவது கட்ட பரிசோதனை நிலையில் கூட திருப்திகரமான செயல்திறனை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

கரோனா நோய்த்தொற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அந்த தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்துள்ள அளவீடுகளை அவை 50 சதவீதம் கூட எட்டவில்லை.எனவே, கரோனா தடுப்புசி பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றாா் அவா்.இந்தச் சூழலில், பொதுமக்கள் பயன்பாடுக்காக தங்களது கரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதிகளை வெளியிட்டுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.