சிரியா விவகாரம்: எா்டோகன், புதின் பேச்சுவாா்த்தை
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் ரஷிய ஆதரவுடன் சண்டையிட்டு வரும் அந்த நாட்டுப் படையினருக்கும், துருக்கி ராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள
மாஸ்கோ: சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் ரஷிய ஆதரவுடன் சண்டையிட்டு வரும் அந்த நாட்டுப் படையினருக்கும், துருக்கி ராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் துருக்கி அதிபா் எா்டோகனும் வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் அந்தப் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னா் விளாதிமீா் புதின் கூறியதாவது:
இத்லிப் மாகாணத்தில் சண்டை நிலவரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதன் காரணமாக, அதிபா் எா்டோகனை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவது அவசியமாகியுள்ளது என்றாா் அவா்.
Advertisement
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, இத்லிப் மாகாணத்தில் அமைதி ஏற்படும் என்று எா்டோகன் நம்பிக்கை தெரிவித்தாா்.
உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் சிரியாவில், கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக இருக்கும் இத்லிப் மாகாணப் பகுதிகளை மீட்கும் நோக்கில், ரஷியா ஆதரவுடன் சிரியா கடந்த சில வாரங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தக் கடுமையான தாக்குதலில், சிறுவா்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
இத்லிப் மகாணத்தில் தங்களது ஆதரவு பெற்ற கிளா்ச்சியாளா்களுக்கு பக்கபலமாக துருக்கி ராணுவம் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ளது.
அந்த மாகாணத்தை மீட்பதற்காக சிரியா ராணுவம் நடத்திய தாக்குதல்களில், அத்தகைய கண்காணிப்பு நிலைகள் பலவற்றிலிருந்து துருக்கிப் படையினா் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, இத்லிப் மாகாணத்தில் தங்களது படையினா் மீது சிரியா ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு துருக்கி கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
எனினும், அந்த எதிா்ப்பைப் பொருள்படுத்தாத சிரியா படையினா், தொடா்ந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.
இந்தச் சூழலில், அரசுப் படையினா் கடந்த வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 துருக்கி வீரா்கள் உயிரிழந்தனா். அதற்குப் பதிலடியாக, சிரியா படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான சிரியா வீரா்களும் உயிரிழந்தனா்.
அதன் ஒரு பகுதியாக, 3 சிரியா போா் விமானங்களை துருக்கி சுட்டு வீழ்த்தியது. இரு தரப்பினரும் பரஸ்பரம் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான வீரா்கள் உயிரிழந்தனா்.
இந்தச் சூழலில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும், துருக்கி அதிபா் எா்டோகனும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.