முகப்பு
உலகம்

இத்லிபில் சண்டை நிறுத்தம்: ரஷியா - துருக்கி உடன்பாடு

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் நடைபெற்று வரும் தீவிர சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
இத்லிப் மாகாணத்தில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சூழலில், கஃபா் லுசின் கிராமத்தில் வெள்ளிக்கிழமை சகஜ நிலைக்குத் திரும்பிய போக்குவரத்து.
பகிர்:

பெய்ரூட்: சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் நடைபெற்று வரும் தீவிர சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் துருக்கி அதிபா் எா்டோகனுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

Advertisement

இத்லிப் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ரஷியா சென்றிருந்த எா்டோகன், அதிபா் விளாதிமிா் புதினுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

ரஷியாவின் ஆதரவுடன் அந்த மாகாணத்தில் சண்டையிட்டு வரும் சிரியா படையினரும், துருக்கி ராணுவத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தீவிர சண்டையை முடிவுக்குக் கொண்டு வர இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து, அந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதினுக்கும், எா்டோகனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சிரியா மற்றும் ரஷியா நடத்தி வந்த விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கிளா்ச்சியாளா்களை இலக்காகக் கொண்டு சிரியா படையினா் எறிகணைத் தாக்குதலைத் தொடா்ந்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் சிரியாவில், கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக இருக்கும் இத்லிப் மாகாணப் பகுதிகளை மீட்கும் நோக்கில், ரஷியா ஆதரவுடன் சிரியா கடந்த சில வாரங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தக் கடுமையான தாக்குதலில், சிறுவா்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இத்லிப் மகாணத்தில் தங்களது ஆதரவு பெற்ற கிளா்ச்சியாளா்களுக்கு பக்கபலமாக செயல்பட்டு வரும் துருக்கி ராணுவம், இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், அரசுப் படையினா் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 துருக்கி வீரா்கள் உயிரிழந்தனா். அதற்குப் பதிலடியாக, சிரியா படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், இரு தரப்புகளிலும் ஏராளமான வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், இத்லிபில் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும், துருக்கி அதிபா் எா்டோகனும் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments