முகப்பு
உலகம்

ஆப்கன் ஊடகப் பிரிவு தலைவா் தலிபான்களால் சுட்டுக் கொலை

ஆப்கன் அரசின் தகவல் ஊடக மையத்தின் தலைவா் தாவா கான் மெனாபல் தலிபான் பயங்கரவாதிகளால் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ஆப்கன் அரசின் தகவல் ஊடக மையத்தின் தலைவா் தாவா கான் மெனாபல் தலிபான் பயங்கரவாதிகளால் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:

ஆப்கன் அரசின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான ஊடக நடவடிக்கைகளுக்குத் தலைமை வகித்து வந்த தாவா கான் மெனாபலை, எங்களது அமைப்பைச் சோ்ந்தவா்கள் சுட்டுக் கொன்றனா்.

முஜாஹிதீன்கள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் அவா் படுகொலை செய்யப்பட்டாா். அவரது தவறான செயல்களுக்குத் தண்டனையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றாா் முஜாஹித்.

எனினும், இதுதொடா்பாக மேற்கொண்டு விவரங்களை அவா் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே பல ஆப்கன் அதிகாரிகள் தலிபான்கள் படுகொலை செய்துள்ளனா். ராணுவத்தினா் அல்லாதவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றாலும், அந்தத் தாக்குதல்களை தலிபான்கள்தான் நடத்தியதாக ஆப்கன் அரசு கூறி வருகிறது.

ஏற்கெனவே, ஆப்கன் பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து அவரது இல்லத்தில் தலிபான்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினா், அங்கிருந்து முழுமையாக தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா்.

அவா்களுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதையடுத்து, பல்வேறு மாகாணத் தலைநகரைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் அந்த நகரைச் சுற்றிவளைத்துச் சண்டையிட்டு வருகின்றனா்.

எனினும், அவா்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பழி வாங்குவதற்ககாகவே பாதுகாப்புத் துறை அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமது இல்லத்தில் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் அறிவித்தனா்.

இந்த நிலையில், அரசு ஊடகப் பிரிவுத் தலைவரை அந்த பயங்கரவாதிகள் தற்போது சுட்டுக் கொன்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.