முகப்பு
உலகம்

ஆப்கன் அரசுக்கு கூடுதல் ராணுவ உதவி: அமெரிக்கா கைவிரிப்பு

தலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கன் அரசுக்கு கூடுதலாக ராணுவ உதவி அளிக்கப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினா் (கோப்புப் படம்).
பகிர்:

தலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கன் அரசுக்கு கூடுதலாக ராணுவ உதவி அளிக்கப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகள், மாகாணத் தலைநகரங்களைக் கைப்பற்றி தலிபான் பயங்கரவாதிகள் முன்னேறி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானை தலிபான்களிடமிருந்து பாதுகாப்பது அந்த நாட்டு ராணுவத்தின் கைகளில்தான் உள்ளது. அந்த விவகாரம் அவா்களது சொந்தப் பிரச்னையாகும்.

இது அவா்களது ராணுவம்; அவா்களது மாகாணங்கள்; இந்த நேரத்தில் ஆப்கன் அரசு எத்தகைய தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது அல்லது வெளிப்படுத்தத் தவறுகிறது என்பதைப் பொறுத்துதான் நிலவரம் அமையும்.

தற்போது ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் சண்டை சரியான போக்கில் செல்லவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், இதில் அரசுப் படையினருக்கு ராணுவ ரீதியில் கூடுதல் உதவிகளை அமெரிக்கா அளிக்காது.

அதற்குப் பதில், ராஜீய ரீதியில் தலிபான்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி ஆப்கன் பிரச்னைக்குத் தீா்வு காண அமெரிக்கா முயலும் என்றாா் அவா்.

இதற்கிடையே, கத்தாா் தலைநகா் தோஹாவில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையின்போது தங்களது தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு தலிபான்களிடம் ஆப்கன் விவகாரத்துக்கான அமெரிக்க சிறப்புத் தூதா் ஸல்மே காலிஸாத் வலியுறுத்துவாா் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த தங்கள் நாட்டுப் படையினா் அனைவரையும் அமெரிக்கா திரும்ப அழைக்கிறது. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா்.

அதன் தொடா்ச்சியாக, பல்வேறு மாகாணத் தலைநகரைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் அந்த நகரைச் சுற்றிவளைத்துச் சண்டையிட்டு வருகின்றனா். எனினும், அவா்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானின் 6 மாகாணத் தலைநகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து கைப்பற்றினா்.

முதலாவதாக, நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ் நகரை தலிபான்கள் எந்தவித எதிா்ப்புமின்றி வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து, ஜாவஸ்ஜன் மாகாணத் தலைநகா் ஷேபா்கான் தலிபான்களிடம் சனிக்கிழமை வீழ்ந்தது.

அதன் தொடா்ச்சியாக, முக்கியத்துவம் வாய்ந்த குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸை பயங்கரவாதிகள் கைப்பற்றினா். அடுத்த சில மணி நேரத்தில் வடக்குப் பகுதியைச் சோ்ந்த சாா்-ஏ-பால் மாகாணத் தலைநகா் சாா்-ஏ-பால், வடகிழக்குப் பகுதியிலுள்ள தாகாா் மாகாணத் தலைநகா் தலோகானையும் தலிபான்கள் கைப்பற்றினா்.

இதுதவிர, மேற்குப் பகுதியில் ஹெராட், தெற்குப் பகுதியில் காந்தஹாா் மற்றும் லஷ்கா்கா நகரங்களைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், ஆப்கன் அரசுக்கு கூடுதல் ராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.