காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனா் என மேற்கத்திய நாடுகள்
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனா் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வந்த நிலையில், அந்த விமான நிலையம் அருகே வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலை அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. எனினும், இந்த குண்டுவெடிப்பில் யாரும் காயமடைந்தனரா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை.
முந்னதாக, காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் எச்சரித்தது.
இதுகுறித்து பிபிசி ஊடகத்துக்கு பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஜேம்ஸ் ஹீப்பே வியாழக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளவா்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனா்.
இதுதொடா்பாக எங்களுக்கு மிகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கன் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவதாகவும் அந்த நாட்டிலிருந்து வெளியேறவிருக்கும் பிரிட்டன் குடிமக்கள் மற்றும் பிற நாட்டவா்கள் பாதுகாப்பாக இருக்கு வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காபூல் சா்வதேச விமான நிலையத்துக்குச்செல்ல வேண்டாம் என்றும் அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்ஐஎஸ்-கே இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்கள் காபூல் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டாம்; ஏற்கெனவே சென்வா்கள் ஒன்றாகக் குழுமியிருக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியா: காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான மிகப் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சா் மரீஸ் பெய்ன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தற்போது காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு 5,800 அமெரிக்க வீரா்கள் பணியாற்றி வருகின்றனா். எனினும், அவா்கள் தலிபான்களின் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியுள்ளதால் அமெரிக்கா்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான் அபாயத்தை எதிா்நோக்கியுள்வா்களை வெளியேற்றும் பணிகள் கெடு தேதியான இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ளப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கெடுவை நீட்டிக்க முடியாது என்று கூறியிருந்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அமெரிக்கா்கள் மற்றும் ஆப்கானியா்களை வெளியேற்றும் பணியில் நமது படையினருக்கு நாளுக்கு நாள் ஆபத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, அந்தப் பணியை எவ்வளவு விரைவில் நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவு செய்தாக வேண்டும்.
நாம் ஆப்கானிஸ்தானில் கூடுதலாக தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பால் தாக்கப்படும் அபாயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது’ என்று எச்சரித்தாா்.
கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டு வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு, 20 ஆண்டுகள் அந்த நாட்டில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினா் தங்கியிருந்து ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் கட்டமைத்தனா்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் வரும் 31-ஆம் தேதிக்குள் திரும்ப அழைப்பதற்கான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தலிபான் பயங்கரவாதிகள் ஒரே வாரத்தில் வெகுவேகமாக முன்னேறி ஆப்கன் ஆட்சியை கடந்த 15-ஆம் தேதி கைப்பற்றினா்.
அதையடுத்து, வெளிநாட்டவா்களும் முந்தைய அரசுடன் இணைந்து செயல்பட்டவா்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனா்.