முகப்பு
உலகம்

ஆயுதம் ஏந்திய தலிபான்களின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில் காபூல் விமான நிலையம் முழுவதும் ஆயுதமேந்திய தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
காபூல் விமான நிலையம் முன்பு தலிபான்கள்
பகிர்:

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில் காபூல் விமான நிலையம் முழுவதும் ஆயுதமேந்திய தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப் படைகள் இன்று முழுவதுமாக அங்கிருந்து வெளியேறியது. 

14 மாதங்களில் அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படும் என கடந்த ஆண்டு அமெரிக்கா- தலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதன்படி, ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த நிலையில், மீட்புப் பணிக்காக காபூல் விமான நிலையத்தில் மட்டும் அமெரிக்கப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அமெரிக்கப் படைகள் முழுவதுமாக இன்று ஆப்கனிலிருந்து வெளியேறியது. 

இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. காபூல் விமான நிலையம் சுற்றிலும் தலிபான்கள், இயந்திர பீரங்கிகள், இயந்திர துப்பாக்கிகள் என பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், 'இது வெற்றியின் மகிழ்ச்சியான தருணம்' என்று கூறினார். 

திங்கள்கிழமை இரவு, கொண்டாட்த்திற்காக  தலிபான்கள் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 'இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, நாங்கள் அமெரிக்கர்களை தோற்கடித்து விட்டோம்' என்று விமான நிலைய காவலர் முகமது இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகிய இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.