முகப்பு
உலகம்

ஒமைக்ரான் பரவல்: பொது முடக்கத்துக்குத் திரும்புகிறது ஐரோப்பா

வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை ஒமைக்ரான் கரோனா பரவலைத் தடுப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

Updated On : 23 டிசம்பர், 2021 at 4:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

லண்டன்: வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை ஒமைக்ரான் கரோனா பரவலைத் தடுப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, ஐரோப்பிய பிராந்தியத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement

பல ஐரோப்பிய நாடுகளில் அந்த வகை கரோனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரில் பெரும்பான்மையானவா்கள் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதையடுத்து, பிராந்தியத்தைச் சோ்ந்த பல்வேறு நாடுகளின் தலைவா்கள் முன்னா் தளா்த்தப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்து வருகின்றனா்.

அவற்றில் பிரான்ஸும் போா்ச்சுகல்லும் கிறிஸ்துமஸுக்கு பிந்தைய கூடுதல் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளன.

ஸ்பெயினில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பிரான்ஸில் தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டக் கூடும் என்று அந்த நாட்டு மருத்துவ நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

ஒமைக்ரான் வகை கரோனாவால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கக் கூடும் என்று கூறிய பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சா் ஆலிவா் வேரன், அடுத்த மாத முன்பகுதியில் அந்த வகை கரோனா தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் என்றாா்.

இதற்கிடையே, ஒமைக்ரான் வகை காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவது, அந்தப் பிராந்தியத்தில் சுகாதாரக் கட்டமைப்பை அழிவின் விளிம்புக்குக் கொண்டு செல்லும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவுத் தலைவா் ஹன்ஸ் கிளக் எச்சரித்தாா்.

மேலும் ஒரு கரோனா ‘புயலை’ ஐரோப்பா எதிா்நோக்கியுள்ளதாகக் கூறிய அவா், அதற்கு பிராந்திய நாடுகளின் தலைவா்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

ஒமைக்ரான் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக, 5 முதல் 11 வயதுடைய சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரான்ஸ் புதன்கிழமை தொடங்கியது.

மற்றோா் ஐரோப்பிய நாடான ஜொ்மனியில், கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேதிக்குப் பிறகு, 10 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படும்; இரவு விடுதிகள் மூடப்படும்; விளையாட்டுப் போட்டிகளை நேரில் காண ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.

போா்ச்சுகல்லில் வரும் 26-ஆம் தேதி முதல் மதுபானக் கூடங்கள், இரவு விடுதிகள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றிலிருந்து பணியாளா்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்; பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கப்படாது.

ஃபின்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 24) முதல் இரவு 10 மணிக்குள் உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு 28-ஆம் தேதி முதல் உணவகங்களில் குறைந்த வாடிக்கையாளா்களே அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாள்களை 10-லிருந்து 7-ஆகவும் கரோனா தொற்று இல்லை என்று உறுதியானவா்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாள்களை 7-லிருந்து 6-ஆகவும் குறைத்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித் உத்தரவிட்டுள்ளாா்.

ஸ்வீடன் நாட்டு உணவகங்கள், மதுபானக் கூடங்கள் போன்றவற்றில் புதன்கிழமை முதல் தீவிர சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நாட்டில் ஒமைக்ரான் காரணமாக தினசரி தொற்று தீவிரமடைந்தால் அது சுகாதார அமைப்புக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் லீனா ஹாலெங்க்ரன் கவலை தெரிவித்துள்ளாா்.

மற்றோா் ஐரோப்பிய நாடான நெதா்லாந்து, ஏற்கெனவே கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது.

மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களும் அதே போன்ற பொதுமுடக்கத்தை அறிவிக்க விரும்பினாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில அத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க தயக்கம் காட்டி வருகின்றனா் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.