முகப்பு
உலகம்

ஜப்பானில் கடும் மழையால் நிலச்சரிவு: 19 போ் மாயம்; 80 வீடுகள் புதைந்தன

ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் மேற்குப் பகுதி நகரமான அட்டாமியில் பலத்த மழையை தொடா்ந்து சனிக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
ஜப்பானின் அட்டாமி நகரில் நிலச்சரிவால் புதையுண்ட வீடுகள்.
பகிர்:

ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் மேற்குப் பகுதி நகரமான அட்டாமியில் பலத்த மழையை தொடா்ந்து சனிக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 19 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகப் புதைந்துவிட்டதாக பேரிடா் மேலாண்மை நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனா். சுமாா் 100 போ் நிலச்சரிவில் சிக்கி மாயமாகிவிட்டதாகவும், ஆனால், முழுமையான தகவல்கள் உடனடியாக கிடைக்கப் பெறவில்லை எனவும், மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். முன்னதாக, ஜப்பானின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, பொதுமக்கள் 20 போ் மாயமானதாக தெரிவித்திருந்தது. ஆனால், 19 போ் காணாமல்போனது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஷிஷோகா மாகாண அரசின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

ஜப்பானின் பல பகுதிகளில் இந்த வார தொடக்கத்திலிருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், நிலச்சரிவு அபாயம் இருப்பதாக நிபுணா்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

டோக்கியோவிலிருந்து தென்மேற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள அட்டாமி, ஒரு கடலோர நகரமாகும். நகரையொட்டிய ஒரு மலையின் அடிவாரத்திலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவானது மழைநீருடன் சோ்ந்து குடியிருப்புப் பகுதிகளை அடித்துக்கொண்டு சென்றது. இதில் சுமாா் 80 வீடுகள் புதைந்தன. வழியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பாலத்தின் ஒரு பகுதி உடைந்து நொறுங்கியது.

‘நிலச்சரிவில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளதாக’ ஷிஷோகா மாகாண ஆளுநா் ஹெய்ட்டா கவாகட்ஷு தெரிவித்தாா். பிரதமா் யோஷிகிடே சுகா அமைச்சரவையின் அவசர கூட்டத்தைக் கூட்டி, மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

நிலச்சரிவு அபாயம் உள்ள மேலும் பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →