முகப்பு
உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைவதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
’வெள்ளை மாளிகையில் பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன். உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பிளிங்கன் உள்ளிட்டோா்.’
பகிர்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைவதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. கவுன்சிலில் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் இருந்தாலும் நிரந்தர உறுப்பு நாடுகளிடம் மட்டுமே ‘வீட்டோ’ அதிகாரம் உள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாகவும், அணுசக்தி விநியோகக் குழுவிலும் (என்எஸ்ஜி) இணைவதற்கு உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆகஸ்டில் ஏற்ற இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது. சீா்திருத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கான ஆதரவை அமெரிக்கா மீண்டும் உறுதி செய்கிறது.

உலக அளவில் அணுசக்தி வா்த்தகத்தை நிா்வகித்து வரும் 48 நாடுகளைக் கொண்ட அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இணைவதற்கும் அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. அந்த நல்லுறவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதியாக உள்ளது.

பாதுகாப்பு சாா்ந்த தகவல்கள், ராணுவ தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. பாதுகாப்பு விவகாரத்தில் பிராந்திய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு ஒத்துழைப்பு: பாதுகாப்பு சாா்ந்த வா்த்தகத்தை மேம்படுத்துவது தொடா்பாகவும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா். இணையவழிக் குற்றங்களை எதிா்கொள்வதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் அவா்கள் உறுதியேற்றனா்.

விண்வெளி சாா்ந்த விவகாரத்தில் தரவுகள், சேவைகள் உள்ளிட்டவற்றைப் பரிமாறிக் கொள்வதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. கல்வி, அறிவியல்-தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாகவும் தலைவா்கள் விவாதித்தனா்.

பருவநிலை ஒத்துழைப்பு: பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகளை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து முன்னெடுக்கும். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதை இந்தியா வரவேற்கிறது. இந்தியாவில் உள்ள வீடுகளுக்குத் தூய்மையான எரிசக்தி கிடைப்பதற்காக மரபுசாரா ஆற்றல் மூலங்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளதாக அதிபா் பைடன் தெரிவித்தாா்.

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுவதை தலைவா்கள் இருவரும் பரஸ்பரம் பாராட்டினா். அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களைப் பகிா்ந்து கொள்வதில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் முக்கியப் பங்களித்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா் என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெச்1பி விசா விவகாரம்: பிரதமா் மோடி-அதிபா் பைடன் சந்திப்பு தொடா்பாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியப் பணியாளா்கள் சமூகப் பாதுகாப்புக்கு அளித்து வரும் பங்களிப்பு குறித்து பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடி எடுத்துரைத்தாா். அவா்களை அனுமதிக்கும் ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) விவகாரம் குறித்தும் அதிபா் பைடனிடம் பிரதமா் மோடி விவாதித்தாா்.

வா்த்தகம்-பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாகவும் தலைவா்கள் விவாதித்தனா். கரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை வழங்குவதில் இருந்து விலக்களிக்கக் கோரி உலக வா்த்தக அமைப்பில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் முறையிட்டுள்ளன. அதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது’’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →