ஸ்ரீநகர் - ஷார்ஜா நேரடி விமான சேவைக்கு முட்டுக்கட்டை போட்ட பாகிஸ்தான்
ஸ்ரீநகரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களின் பாதை மாற்றப்பட்டால் பயண நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கும்.
ஸ்ரீநகர் - ஷார்ஜா நேரடி விமான சேவைக்கு வான்வெளி வழங்க பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. கடந்த மாதம், ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இச்சேவையை தொடங்கிவைத்தார். ஸ்ரீநகர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான இந்த விமான சேவையை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் குறைந்த விலையில் நடத்திவருகிறது.
விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 2009ஆம் ஆண்டு, ஸ்ரீநகர் - துபாய் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், வான்வெளி வழங்க பாகிஸ்தான் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, பயணிகளிடையே வரவேற்பு குறைந்தது. இதன் காரணமாக, சேவை நிறுத்தப்பட்டது. அந்த முறை போல் இந்த முறையும், சேவை நிறுத்தப்படுமா என அச்சம் எழுந்துள்ளது.
Advertisement
ஸ்ரீநகரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களின் பாதை மாற்றப்பட்டால் பயண நேரம் ஒரு மணி நேரம் அதிகமாகும். அதுமட்டுமின்றி, எரிபொருள் மற்றும் பயண கட்டணம் அதிகரிக்கும். ஸ்ரீநகர், ஷார்ஜா இடையே முதன்முதலாக, அக்டோபர் 23ஆம் தேதி விமான சேவை தொடங்கப்பட்டது.
அக்டோபர் 30ஆம் தேதி வரை, விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாகத்தான் சென்றது என்றும் நவம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தான், குஜராத் வழியாக அரபிக்கடலில் மேற்கு நோக்கி இயக்கப்பட்டது என்றும் விமான கண்காணிப்பு நிறுவனமான ரேடர்24 தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பருவநிலை மாற்றம்: எந்த நாடும் தப்ப முடியாது - பிரதமர் மோடி
விமான சேவையை ஒரு நாள் விட்டுவிட்டு இயக்க திட்டமிட்டிருப்பதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசை விமரிசித்த ஜம்மு காஷ்மீ்ர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "ஸ்ரீநகரிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டிடம் அனுமதி வாங்க கூட இந்திய அரசு முயற்சி எடுக்காமல் இருப்பது குழப்பமாக உள்ளது. எந்த வித களப்பணியும் இல்லாமல் பிரமிக்கவைக்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டது" என்றார்.