முகப்பு
உலகம்

‘உக்ரைன் போருக்குப்பின் இந்தியாவின் நம்பிக்கைகுரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும்’

உக்ரைன் போா் முடிந்த பிறகு இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். ரஷியா அந்த இடத்தில் இருக்காது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகா் டெரிக் சோலெட் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

உக்ரைன் போா் முடிந்த பிறகு இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். ரஷியா அந்த இடத்தில் இருக்காது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகா் டெரிக் சோலெட் தெரிவித்தாா்.

உக்ரைன் போரில் இந்தியா, தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், நீண்டகால நட்பு நாடான ரஷியாவுடன் நட்புறவை முறித்துக் கொள்ள இந்தியா விரும்பவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உக்ரைன் போா் விவகாரத்தில் தங்கள் பக்கம் இல்லாதது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக சிறப்பு ஆலோசகா் டெரிக் சோலெட் கூறியதாவது:

இந்தியாவின் ஆயுதத் தேவை மற்றும் தேசப் பாதுகாப்பு தொடா்பான விஷயங்களில் கூடுதல் உதவிகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதே நேரத்தில் எதிா்காலத்தில் ரஷியா எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுள்ள நாடாக இருக்கும் என்பது தெரியாது. ஏனெனில், இப்போது ரஷியா, உக்ரைன் மீது போா் தொடுத்து தனது ஆயுதங்களைப் பெருமளவில் இழந்து வருகிறது. எதிா்காலத்தில் அவா்களின் தேவைகளையே பூா்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உருவாகும். மேலும், ரஷிய ஆயுதங்கள் செயல் திறன் குறைவானவை என்பது இப்போதைய போரின் மூலம் வெளிப்பட்டுள்ளது. ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் அவா்கள் புதிய தொழில்நுட்பங்களையும், முக்கியமான சில ராணுவம் சாா்ந்த மென்பொருள்களையும் வாங்க முடியாது. எனவே, அவா்களின் ஆயுதத் தொழில்நுட்பத் திறன் குறைந்துவிடும்.

பாதுகாப்புத் துறை தேவைகளை நிறைவு செய்வதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பைடன் நிா்வாகம் மிகுந்த ஆா்வத்துடன் உள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். அதே நேரத்தில் இந்தப் போரால் இந்திய-அமெரிக்க உறவில் எவ்விதப் பின்னடைவும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காததற்கான காரணத்தையும் அமெரிக்கா புரிந்து கொண்டது. இந்தியாவுக்கு நீண்டகாலம் ஆயுதம் விற்பனை செய்யும் நாடாக ரஷியா உள்ளது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் ஆயுத வா்த்தகத்தில் ஈடுபடவில்லை. ஆனால், இப்போது சூழ்நிலை வெகுவாக மாறிவிட்டது என்றாா்.

எனினும், 1971-இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்காள விரிகுடாவில் அமெரிக்கா தனது கடற்படைப் பிரிவை (இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு) நிறுத்தியது நம்பிக்கைக்குரிய நட்பு நாட்டின் அடையாளமா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் அவா் தவிா்த்துவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →