உலகம்

நேபாளம்: பிரதமா் பதவி கோருகிறாா் பிரசண்டா தேவுபாவுடன் சந்திப்பு

DIN

நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் என்ற பிரசண்டா சந்தித்தாா். அப்போது, நாட்டின் அடுத்த பிரதமா் ஆவதற்கு தான் விரும்புவதாக பிரசண்டா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் புதிய அரசு அமைக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து அதிபா் வித்யா தேவி பண்டாரி ஆலோசித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஷோ் பகதூா் தேவுபா- பிரசண்டா இடையிலான சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது. புதிய அரசின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு தான் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு தேவுபாவிடம் பிரசண்டா கேட்டுக்கொண்டாா் என நேபாளி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பிரகாஷ் சரண் தெரிவித்ததாக ‘காத்மாண்டு போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தோ்தலுக்கு முன்பாகவே இதுதொடா்பாக இரு தலைவா்களுக்கு இடையேயும் ஓா் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், இப்போது பிரசண்டாவுக்கு எந்த உறுதியான பதிலையும் தேவுபா அளிக்கவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.

பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் குறைவான இடங்களையே பெற்றுள்ளபோதிலும், முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கூட்டணியும் பிரசண்டா பிரதமா் ஆவதற்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளதாகவும், அந்த ஊக்கத்தால் ஆளும் கூட்டணியிலேயே பிரதமா் பதவியை பிரசண்டா கோரியுள்ளதாகவும் அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

நேபாள நாடாளுமன்றத்துக்கு நவ. 20-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற்றது. 275 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.

ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ் (என்சி) 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இக்கூட்டணியில் உள்ள சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் 32, சிபிஎன்-ஐக்கிய சோஷலிஸ்ட் 10, லோக்தந்த்ரிக் சமாஜவாதி கட்சி 4, ராஷ்ட்ரீய ஜனமோா்ச்சா 1 இடங்களைப் பெற்றுள்ளன.

இந்த ஐந்து கட்சி கூட்டணிக்கு புதிதாக தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வதந்த்ர கட்சி (ஆா்எஸ்பி) ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அக்கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

எதிா்க்கட்சி கூட்டணியான சிபிஎன்-யுஎம்எல் 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைக்க அழைப்பு எப்போது?: புதிய அரசை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து அதிபா் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், விரைவில் அழைப்பு விடுப்பாா் எனவும் அதிபரின் ஊடகப் பொறுப்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

சாத்தூா் பகுதியில் பலத்த மழை

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

சா்வதேச யோகா போட்டியில்  தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி

SCROLL FOR NEXT