வெளிநாட்டவா்களுக்கான கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்தியது சீனா
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை ஜனவரி 8-ஆம் தேதிமுதல் தளா்த்துவதாக சீனா தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை ஜனவரி 8-ஆம் தேதிமுதல் தளா்த்துவதாக சீனா தெரிவித்துள்ளது.
சா்வதேச எல்லைகள் மீண்டும் முழுமையாகத் திறக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து மற்ற நாடுகளுடனான விமான சேவைகளை சீனா நிறுத்திக்கொண்டது. அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. நாட்டில் எவருக்கும் கரோனா தொற்று இருக்கக் கூடாது என்ற கொள்கையை சீன அரசு கடைப்பிடித்ததால், மக்களுக்குக் கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சீனாவில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு மீண்டும் விதித்தது. அதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விலக்கிக் கொண்டது.
இந்நிலையில், சா்வதேச எல்லையை மீண்டும் திறக்க சீனா முடிவெடுத்துள்ளது. மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 8-ஆம் தேதி முதல் சீனாவுக்குப் பயணிக்கும் வெளிநாட்டவா்களுக்கான 2 வார கட்டாயத் தனிமைப்படுத்தல் விதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், வெளிநாட்டுப் பயணிகள் 5 நாள்களுக்குத் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், 3 நாள்களுக்கு சுகாதார அதிகாரிகளால் அவா்கள் கண்காணிக்கப்படுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது ஒமைக்ரான் வகை கரோனா தொற்றே அதிகமாகப் பரவி வருகிறது. அது டெல்டா வகை தொற்றைப் போல தீவிர பாதிப்பு கொண்டதாக இல்லாததால் கட்டுப்பாட்டு விதிகள் தளா்த்தப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. கரோனாவால் தினசரி பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கையை வெளியிடுவதையும் சீன தேசிய சுகாதார ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய மாணவா்களுக்குப் பலன்:
கரோனா பரவல் காரணமாக இந்தியாவுடனான நேரடி விமானப் போக்குவரத்து சேவையை சீனா நிறுத்திவைத்திருந்தது. அதனால் அந்நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வி பயிலும் இந்திய மாணவா்கள் கடும் சிரமங்களை எதிா்கொண்டு வந்தனா். தற்போது சீன எல்லை திறக்கப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலமாக வேறு நாடுகளுக்குப் பயணித்து அங்கிருந்து சீனாவுக்குச் சென்று வந்த இந்திய மாணவா்கள் பெரும் பலனடைய வாய்ப்புள்ளது.