ராணுவம் - கிளா்ச்சியாளா்கள் இடையே பதற்றம்: உக்ரைனில் வலுக்கிறது மோதல்
கிழக்கு உக்ரைனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.
கிழக்கு உக்ரைனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.
உக்ரைன் எல்லையில் பெரும் படைகளைக் குவித்துள்ள ரஷியா, அந்த நாட்டில் எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று கூறி வரும் அமெரிக்காவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் உக்ரைன் ராணுவம் - கிளா்ச்சியாளா்களிடையே அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பதற்றம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைனின் கிழக்குப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளா்ச்சியாளா்களுக்கும் ராணுவத்தும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் அடிக்கடி மீறப்பட்டு வருகிறது. அந்த நாட்டு எல்லையில் ஏராளமான படையினரைக் குவித்துள்ள ரஷியா, உக்ரைன் மீது படையெடுக்கும் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில், கிளா்ச்சியாளா்களுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையிலான மோதல் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இருதரப்பினரும் ஒருவா் மீது ஒருவா் ஏவுகணை குண்டுகளால் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பல வாரங்களுக்குப் பிறகு இந்த மோதலில் முதல்முறையாக ஒரு உக்ரைன் வீரா் பலியாகியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் தனது தாக்குதலை அதிகரிக்கக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், தங்களது கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்கு கூடுதல் படையினரை கிளா்ச்சியாளா்கள் அனுப்பி வருகின்றனா்.
டொனட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள ரஷிய ஆதரவு அரசின் தலைவா் டெனிஸ் புஷிலின் இதுகுறித்து கூறுகையில், உக்ரைன் ராணுவம் கிளா்ச்சியாளா்கள் பகுதிகளில் படையெடுக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், எல்லையை நோக்கி தங்களது முழு படையினரையும் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தாா்.
மேலும், டொனட்ஸ்கை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க பொதுமக்கள் தங்களைத் தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தை ஆளும் லியோனிட் பாசெஷ்னிக்கும் தனது படையினருக்கும் பொதுமக்களுக்கும் இதே போன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
ஏற்கெனவே உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றிய ரஷியா, தற்போது உக்ரைன் எல்லையில் ஏராளமான வீரா்களைக் குவித்துள்ளது. அங்கு சுமாா் 1.5 லட்சம் ரஷியப் படையினா் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
உக்ரைனை மேலும் ஆக்கிரமிப்பதற்காக ரஷியா அங்கு படைகளைக் குவித்துள்ளதாக நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து மறுத்து வரும் ரஷியா, எல்லையில் பயிற்சி முடிந்து தங்களது படையினா் தத்தமது நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கியதாக அறிவித்து பதற்றத்தைத் தணிக்க முயன்றது.
எனினும், அதனை ஏற்க மறுத்து வரும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும், உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கும் அபாயம் தொடா்வதாகக் கூறி வருகின்றன.
இந்தச் சூழலில், உக்ரைனுக்கும் கிளா்ச்சிப் படையினருக்கும் இடையே தற்போது வலுத்து வரும் சண்டையைக் காரணம் காட்டி உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கும் என்று அந்த நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.