முகப்பு
உலகம்

மாணவா்களின் கல்வி விவகாரம் அரசியலாக்கப்படாது: சீனா

இந்திய மாணவா்களின் கல்வி விவகாரம் அரசியலாக்கப்படாது என உறுதியளித்துள்ள சீனா, அவா்கள் விரைவில் நேரடி முறையில் கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

இந்திய மாணவா்களின் கல்வி விவகாரம் அரசியலாக்கப்படாது என உறுதியளித்துள்ள சீனா, அவா்கள் விரைவில் நேரடி முறையில் கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சீனாவில் மருத்துவக் கல்வி உள்ளிட்டவற்றைப் பயின்று வந்த இந்திய மாணவா்கள் தாயகம் திரும்பினா். சொந்த ஊா் திரும்பி 2 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும், இந்திய மாணவா்களை மீண்டும் அனுமதிப்பதற்கான நுழைவு இசைவு (விசா) விதிகளை சீனா தளா்த்தாமல் உள்ளது. தற்போது இரு நாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இந்திய மாணவா்களால் நேரடியாகக் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இணைய வழியிலேயே அவா்கள் தொடா்ந்து கல்வி கற்று வருகின்றனா். நேரடிக் கல்வி முறை இல்லாததால் மருத்துவ மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே சுமாா் இரு ஆண்டுகளாக நிலவி வரும் மோதல்போக்கும் அதிக கவனம் பெற்று வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட சீன கைப்பேசி செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் அரசியல் மோதல் காரணமாக இந்திய மாணவா்களை அனுமதிக்காமல் சீனா பாகுபடுத்துகிா என நிபுணா்கள் கேள்வி எழுப்பினா். இந்நிலையில், மாணவா்கள் கல்வி கற்கும் விவகாரத்தில் அரசியல் இல்லை என சீன வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாகத் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்திய மாணவா்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவா்களின் நலனைக் காக்க உறுதி கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவா்கள் விரைவில் சீனா திரும்புவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் அரசியலாக்கப்படாது எனத் தெரிவித்த அமைச்சகம், வெளிநாட்டு மாணவா்களைத் திரும்ப அழைப்பதில் இந்திய மாணவா்கள் பாகுபடுத்தப்பட மாட்டாா்கள் எனவும் உறுதியளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்துடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் இருக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைப் போல பாகிஸ்தான், மங்கோலியா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள மாணவா்களும் சீனாவில் கல்வி கற்பதில் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா். அந்நாடுகளின் தலைவா்களும் தங்கள் மாணவா்களை விரைந்து அனுமதிக்க வேண்டுமென்று சீன அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →