முகப்பு
உலகம்

மோடியின் உதவியை நாடும் தூதர்...பதற்றமான சூழலில் கோரிக்கை விடுத்த உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா இன்று காலை ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், இதில் இந்தியா தலையிட வேண்டும் என உக்ரைன் தூதர் இகோர் போலகா கோரிக்கை விடுத்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
மோடி (கோப்புப்படம்)
பகிர்:

உக்ரைன் மீது ரஷியா இன்று காலை ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், இதில் இந்தியா தலையிட வேண்டும் என உக்ரைன் தூதர் இகோர் போலகா கோரிக்கை விடுத்துள்ளார். 

நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும் என எச்சரித்த அவர், "மோடி மிகவும் சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய உலகத் தலைவர்களில் ஒருவர். ரஷ்யாவுடன் உங்களுக்கு சிறப்பான மற்றும் வியூக ரீதியான உறவு உள்ளது. மோடி புதினிடம் பேசினால் அவர் பதிலளிப்பார் என நம்புகிறோம்" என்றார்.

உக்ரைனில் டான்பாஸ் நகரை இலக்காக வைத்து 'சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு' புதின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, உக்ரைன் வட பகுதிக்குள் கிரிமியா தீபகற்பத்திலிருந்து ரஷியாவின் டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

இதுகுறித்து உக்ரைன் தூதர் இகோர் போலகா கூறுகையில், ""ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் சிறப்புமிக்க உறவைக் கருத்தில் கொண்டு, இந்தியா மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். எங்கள் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, உங்கள் சொந்த குடிமகனின் பாதுகாப்பிற்காகவும், இந்தியாவின் தலையீடு தேவை.

நெறிமுறைக்காக விடப்படும் அறிக்கைகளை நாங்கள் விரும்பவில்லை, அது ஒன்றுக்கும் உதவாது. எங்களுக்கு முழு உலகத்தின் ஆதரவு தேவை" என்றார்.

உக்ரைனில் கிட்டத்தட்ட 15,000 இந்தியர்கள் விசித்துவருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை நாடாக உள்ளது.

30 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சம் தெரிவித்து வருகிறது. எனவே, உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும் அதற்கு அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் உடன்படவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரா்களை ரஷியா குவித்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.