முகப்பு
தமிழ்நாடு

வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?

தொண்டர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படும் சத்தியமூர்த்தி பவன்...

Updated On : 3 ஏப்ரல் 2026, 12:09 pm IST
சத்தியமூர்த்தி பவன் - மார்ச் 3 காலை 10.05 மணி. - Dinamani
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்னும் அறிவிக்காத நிலையில், அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை காலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர, திமுகவிடம் பல்வேறு நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ், பல கட்டப் பேச்சுவார்த்தைக்கு பின், கடந்த தேர்தலைவிட 3 தொகுதிகளை கூடுதலாகவும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் பெற்றது.

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் மார்ச் 4 ஆம் தேதி இரவு கையொப்பமானது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுபெற்றது. தொடர்ந்து, காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை என்பதும் மார்ச் 28 ஆம் தேதியே திமுக தலைமை அறிவித்துவிட்டது.

Advertisement

Advertisement

வேட்புமனு தாக்கல் 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு நாள்களே வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் இருக்கும் சூழலில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை அறிவிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒரு தரப்பினர் தலைமைக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கூடிய மத்திய தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு வேட்பாளர்களை பட்டியலைப் பார்த்த அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில திருத்தங்களை கூறிய அவர், தனது அனுமதியின்றி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடக்கூடாது என்று கறாராக தெரிவித்துவிட்டதாக தகவல்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நேற்று நள்ளிரவு வரை வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, இன்றிரவு (ஏப். 2) அல்லது நாளை காலை (ஏப். 3) வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று நேற்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை காங்கிரஸின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. 5 தொகுதிகளில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மற்ற கட்சிகளின் அலுவலகங்களில் தேர்தலை முன்னிட்டு தலைவர்களும், தொண்டர்களும் பம்பரமாகச் சுற்றி வரும் நிலையில், காங்கிரஸின் மாநில கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் தில்லியில் முகாமிட்டிருக்கும் நிலையில், இன்றாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகுமா எனத் தொண்டர்கள் காத்துள்ளனர்.

summary

Sathyamurthy Bhavan Wears a Deserted Look! When Will the Congress List Be Released?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.