மேற்கு இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
மேற்கு இந்தோனேசியாவின் படாங்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு இந்தோனேசியாவின் படாங்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது,
மேற்கு இந்தோனேசியாவின் படாங்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுமத்ரா தீவு மற்றும் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் மக்களை பீதிக்குள்ளாக்கியது.
மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான நகரமான புக்கிட்டிங்கியில் இருந்து வடமேற்கில் 66 கிலோமீட்டர் (41 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கி.மீ (7.4 மைல்) அடியில் தாக்கியது.
இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் புவிஇயற்பியல் அமைப்பின் தலைவர் ட்விகோரிடா கர்னாவதி, சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவித்தார். ஆனால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தார்.
மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான படாங்கில் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். கட்டடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறினர்.
மேற்கு பசாமான் மாவட்டத் தலைவர் ஹம்சுர்டி கூறுகையில்,
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர். ஆனால் இறப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு அளவிலான சேதம் குறித்த தகவல்களை அதிகாரிகள் இன்னும் சேகரித்து வருகின்றனர்.
ஜனவரி 2021இல், மேற்கு சுலவேசி மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 105 பேர் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 6,500 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.