உக்ரைன்: போர்க்களத்தில் பூத்த புத்தம் புது மலர்
உக்ரைனில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தாக்குதலைத் தொடா்ந்த ரஷிய ராணுவம், தலைநகா் கீவ் நகருக்குள் நுழைந்துள்ளது.
உக்ரைனில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தாக்குதலைத் தொடா்ந்த ரஷிய ராணுவம், தலைநகா் கீவ் நகருக்குள் நுழைந்துள்ளது.
போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனின் கீவ் நகரில், பொதுமக்களின் தங்குமிடமாக மாறியிருக்கும் ஒரு சுரங்கப் பாதைக்குள் கர்ப்பிணிகளும், கைக்குழந்தைகளுடன் தாய்மார்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில், ஒரு கர்ப்பிணிக்கு பிப்ரவரி 25ஆம் தேதி நள்ளிரவில் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையின் புகைப்படம் சுட்டுரையில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறுப்பட்டிருப்பதாவது, ரஷியப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து விட்டதால், நாடு முழுவதுமிருக்கும் சுரங்கப் பாதைகளும், கீழ்த்தளங்களும் பொதுமக்கள் தங்கும் பாதுகாப்பிடமாக மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஸ்நேக் தீவு: மண்டியிடாமல் வீரம் காத்த 13 உக்ரைன் வீரர்கள்
கீவ் நகரில் உள்ள அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும் வகையில் தொடர்ந்து முன்னேறி வரும் ரஷியப் படைகளுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே கீவ் நகர வீதிகளில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
தலைநகா் கீவில் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ரஷிய விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. தனது அரசைக் கவிழ்க்கும் வகையில் நடத்தப்படும் இத்தாக்குதலைத் தடுக்க சா்வதேச நாடுகளின் உதவியை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி கோரியிருந்தார்.
போர் தொடங்கியது..
ரஷிய அதிபா் புதினின் அறிவிப்பையடுத்து, உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரைத் தொடங்கியது ரஷியா. விமானங்கள் மூலமும், ஏவுகணைத் தாக்குதல் மூலமும் உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் குண்டுமழை பொழிந்தது ரஷிய ராணுவம். பின்னா், கிழக்கு உக்ரைன், கிரீமியாவின் தென் பிராந்தியம் வழியாகவும், அண்டை நாடான பெலாரஸிலிருந்து வடக்கு நோக்கியும் ரஷிய தரைப் படையினா் உக்ரைனுக்குள் புகுந்தனா். முதல் நாளில் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை குண்டுவீசி தகா்த்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. உக்ரைன் தரப்பில் ராணுவ வீரா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.