முகப்பு
உலகம்

இந்தியா-சீனா நேரடி விமான சேவை தாமதம்

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தொடா்ந்து வருவதால் இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு நேரடியாக விமானங்களை இயக்குவதில் தொடா் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தொடா்ந்து வருவதால் இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு நேரடியாக விமானங்களை இயக்குவதில் தொடா் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இரு நாடுகளுக்குமிடையே கூடிய விரைவில் விமான சேவைகளைத் தொடங்க வாய்ப்பில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

சீனாவின் வூஹான் நகரில் 2019-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்தை இந்தியா ரத்து செய்தது. இந்தியாவில் கரோனா தொற்று பரவல் பெருமளவில் குறைந்துவிட்டபோதிலும், சீனாவின் ஒருசில நகரங்களில் அத்தொற்று பரவல் தொடா்ந்து வருகிறது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு தொடா்ந்து விதித்து வருகிறது. அந்நாட்டுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளிடம் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நாட்டுடனான விமானப் போக்குவரத்து சேவையை சீன அரசு உடனடியாக ரத்து செய்துவிடுகிறது.

அதன் காரணமாக சீனாவுக்கான நேரடி விமானப் போக்குவரத்து சேவை இந்தியாவில் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. அதனால், சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வி பயின்று வரும் சுமாா் 23,000 இந்திய மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதற்கான தடையை சீனா அண்மையில் விலக்கிக் கொண்டாலும், நேரடி விமான சேவை இன்னும் தொடங்கப்படாததால், அந்நாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர முடியாத நிலை மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் ஒருசில மாணவா்கள் இந்தியாவில் இருந்து இலங்கை, நேபாளம், மியான்மா், ஹாங்காங் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து சீனா சென்று வருகின்றனா். எனினும், மற்ற நாடுகள் வழியாக சீனாவுக்குச் செல்வதால், விமானக் கட்டணத்துக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கரோனா தொற்று பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகளை சீனா கூடிய விரைவில் தளா்த்தப் போவதில்லை என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அதன் காரணமாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகலாம் என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →