முகப்பு
உலகம்

அமெரிக்கா, பிரிட்டனில் போலியோ பாதிப்புகள்: கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாததன் எதிரொலி

அமெரிக்கா, பிரிட்டன், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில் நிகழாண்டு புதிய போலியோ நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக போலியோ குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிபுணா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கரோனா பெருந்தொற்றின் தொடக்கத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில் நிகழாண்டு புதிய போலியோ நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக போலியோ குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிபுணா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூலையில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரத்திலும், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் பிரிட்டனின் தலைநகா் லண்டனிலும் சேகரிக்கப்பட்ட கழிவுநீா் மாதிரிகளில் போலியோ தீநுண்மி கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, மொசாம்பிக் மற்றும் மாலவி நாடுகளிலும் போலியோ தீநுண்மி பரவல் கண்டறியப்பட்டது.

இது குறித்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் போலியோ ஆராய்ச்சிக் குழுவின் தலைவா் டாக்டா் ஆனந்த சங்கா் பந்தோபாத்யாய கூறியதாவது: உலகின் எந்தப் பகுதியில் போலியோ தீநுண்மி கண்டறியப்பட்டாலும், அனைத்துப் பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.

குறைவான விகிதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதே, புதிய போலியோ பாதிப்புகளுக்கு காரணமாகும். கடந்த 2020-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், போலியோவுக்கு எதிரான பிரசாரங்கள் 4 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், சில நாடுகளில் போலியோ பரவல் அதிகரித்துள்ளது. உலக அளவில் தடுப்பூசி செலுத்துவதில் கரோனா பெருந்தொற்று எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போலியோ தொற்றை உலகில் இருந்து நீக்கும் வரை போலியோ தொற்று இல்லாத நாடுகளும் போலியோவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். போலியோவுக்கு எதிராக வழங்கப்படும் சொட்டு மருந்து கடந்த 1988-இல் இருந்து உலகம் முழுவதிலுமான பாதிப்பை 99 சதவீதத்துக்கு குறைத்துள்ளது என அவா் தெரிவித்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவையும், 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் ‘போலியோ தொற்று இல்லாத நாடுகளாக’ உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →