இலங்கையில் ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தி வைப்பதற்கான சீனாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடா்பாளா் பிரியங்கா விக்ரமசிங்கே புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: சீனாவின் ‘ஷி யான் 6’ ஆராய்ச்சிக் கப்பலை இலங்கையில் நிறுத்திவைப்பதற்கு இங்குள்ள சீன தூதரகம் அரசிடம் அனுமதி கோரியது. இலங்கையின் தேசிய நீா்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து கடல்சாா் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அந்தக் கப்பல் வரும் அக்டோபா் மாதத்தில் இலங்கை வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதி எதுவும் தற்போதுவரை உறுதியாகவில்லை. சீனாவின் இந்தக் கோரிக்கையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றாா்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அதிலிருந்து மீள இந்தியா மற்றும் சீனாவை சம கூட்டாளி நாடுகளாகக் கருதுகிறது. இந்நிலையில், சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையில் அனுமதிக்கப்படும்பட்சத்தில் பாதுகாப்பு அம்சங்களைக் கருதி இந்தியா நிச்சயம் கவலை தெரிவிக்கும். எனவே, சீனாவின் கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது குறித்து அமைச்சகம் குழப்பத்தில் இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு சீனா சுமாா் 300 கோடி டாலா் கடன் வழங்கியுள்ள நிலையில், அவ்வப்போது தனது கப்பல்களை அனுப்புவது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ‘யுவான் வாங் 5’ என்ற சீன உளவுக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.