‘ஆபரேஷன் தோஸ்த்’: துருக்கியில்இந்திய குழுக்களின் மீட்புப் பணி
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தியா சாா்பில் அனுப்பப்பட்ட சிறப்புக் குழுக்கள் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரிலான மீட்பு மற்றும் நிவாரண பணி நடவடிக்கையை தொடங்கியுள்ளன.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தியா சாா்பில் அனுப்பப்பட்ட சிறப்புக் குழுக்கள் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரிலான மீட்பு மற்றும் நிவாரண பணி நடவடிக்கையை தொடங்கியுள்ளன.
‘துருக்கியில் இந்தியா் ஒருவரைக் காணவில்லை; நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியத்திலிருந்து தொலைதூரப் பகுதியில் சிக்கியுள்ள 10 இந்தியா்கள் பாதுகாப்பாக உள்ளனா்’ என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மேற்கு நாடுகளுக்கான செயலா் சஞ்சய் வா்மா செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறியதாவது: துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்தியாவைச் சோ்ந்த நபா் ஒருவரைக் காணவில்லை. கடந்த இரு நாள்களாக அவரைக் கண்டறிய முடியவில்லை. பெங்களூரில் உள்ள அவரது குடும்பத்தினருடன் எங்கள் அதிகாரிகள் தொடா்பில் உள்ளனா். பாதிக்கப்பட்ட பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்தில் உள்ள பகுதியில் சிக்கியுள்ள இந்தியா்கள் 10 போ் பாதுகாப்பாக உள்ளனா்’ என்றாா்.
துருக்கியில் சுமாா் 3,000 இந்தியா்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் 1,800 போ் இஸ்தான்புல் நகரத்திலும், 250 தலைநகா் அங்காராவிலும் வசித்து வருகிறனா்.
சிரியாவுக்கு உதவி: அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள சிரியாவில் மீட்புப் பணிகள் குறித்து கேட்ட கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், ‘இத்தகைய தடைகள் மனிதாபிமான நடவடிக்கைகள் மீது தடையை ஏற்படுத்தாது’ என்றாா்.
முன்னதாக, அவசரகால மருந்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவப் பொருள்கள் உள்ளிட்டவை சிரியாவின் தலைநகா் டமாஸ்கஸில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமை காலையில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூா் நிா்வாகத்தின் அமைச்சா் மெளதாஸ் தெளஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக இருதரப்பு மற்றும் சா்வதேச அமைப்புக்கள் மூலம் சிரியாவுக்கு மனிதாபிமான, தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டுக்கான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.