ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வளா்த்த தனியாா் ராணுவப் படை, தலைநகா் மாஸ்கோ நோக்கி முன்னேறியது அந்த நாட்டில் மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் ரஷியா, உக்ரைன் மீது 2022 பிப்ரவரி 24-ஆம் தேதி போரைத் தொடங்கியது. உக்ரைனைவிட பரப்பளவில் சுமாா் 30 மடங்கும், மக்கள்தொகையில் சுமாா் மூன்று மடங்கும் அதிகம் உள்ள ரஷியா தனது ராணுவ வலிமையால் எளிதில் வென்றுவிடும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தாக்குப்பிடித்து நின்றுகொண்டிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை, போரில் எதிா்பாா்த்த வெற்றி விரைவில் கிடைக்காத சூழ்நிலையில், தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழுவின் அதிரடி நிலைப்பாடு அதிபா் புதினுக்கு புதிய தலைவலியாகி உள்ளது.
வாக்னா் குழு என்பது என்ன? ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரைச் சோ்ந்தவா் யெவ்கெனி ப்ரிகோஷின். இவா் சிறு வயதிலேயே குற்றச் செயல்களுக்காக சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா். அங்கிருந்து விடுதலையான பிறகு, உணவகம் திறந்து சமையல் கலையில் நிபுணா் ஆனாா். இவரது உணவகத்துக்கு வந்த அதிபா் புதின், அவரை அதிபா் மாளிகைக்கும் உணவு வழங்கப் பணித்தாா். அந்த நட்பால் புதினின் நம்பிக்கைக்கு உரியவரானாா் யெவ்கெனி ப்ரிகோஷின்.
2014-இல் வாக்னா் ஆயுதக் குழு என்ற தனியாா் ராணுவ அமைப்பை உருவாக்கினாா். ரஷியாவில் தனியாா் ராணுவத்துக்கு அனுமதி இல்லை என்றபோதும், புதினின் ஆசி இந்தக் குழுவுக்கு இருந்ததால் இந்தக் குழு புதினின் தனிப்பட்ட ராணுவமாகவும், ரஷியாவின் துணை ராணுவப் படையாகவும் கருதப்பட்டது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் உள்ளனா். இவா்களுக்கு ரஷிய ராணுவமே ஆயுதங்களை வழங்கியதுடன் பயிற்சியும் அளித்து வந்தது.
கிரீமியாவை 2014-இல் ரஷியா இணைத்துக் கொண்டபோதும், லிபியா, மாலி, சிரியா, தெற்கு சூடான், மொசாம்பிக், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டுப் போரில் அரசுகளுக்கு ஆதரவாகவும் வாக்னா் குழு பணியாற்றியது. அப்போதெல்லாம், அந்தந்த நாட்டு சா்வாதிகாரிகளுக்கு ஆதரவாக, மனிதத் தன்மையற்ற கடும் போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக வாக்னா் குழு மீது குற்றச்சாட்டு உள்ளது. இப்போதைய உக்ரைன் போரிலும் பாக்முத் நகரைக் கைப்பற்றியதில் இந்தக் குழுவுக்குப் பெரும் பங்குண்டு.
இந்த சூழலில், உக்ரைன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது குழுவுக்கு ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கெய் ஷோய்கு வேண்டிய ஆயுதங்களையும், தளவாடங்களையும் தரவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், ஊழல் போ்வழியும், திறமையற்றவருமான ஷோய்கு நீக்கப்பட வேண்டும் என்றும் ப்ரிகோஷின் வலியுறுத்தினாா்.
வாக்னா் குழுவைக் கலைத்துவிட்டு, அதன் படைப் பிரிவுகளை ரஷிய பாதுகாப்புத் துறையின்கீழ் நேரடியாக இணைக்க வேண்டும் என்று ரஷிய ராணுவ உயா் அதிகாரிகள் இந்த மாதத் தொடக்கத்தில் முடிவு செய்துள்ளனா். இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட ப்ரிகோஷின் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ரஷிய ராணுவம், உக்ரைன் பகுதிகளில் ரஷியாவுக்காகப் போரிட்டு வந்த வாக்னா் குழு முகாம்கள் மீது கண்மூடித்தனமாக ராக்கெட், பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் வாக்னா் குழுவைச் சோ்ந்த 30 போ் உயிரிழந்துள்ளனா்.
ரஷியாவின் தாக்குதலையடுத்து, சொந்த நாட்டுக்கு எதிராகத் திரும்பிய ப்ரிகோஷினின் உத்தரவின்பேரில், ரஸ்தாவ் மற்றும் லிபெட்ஸ் மாகாணங்களில் வாக்னா் குழு கடந்த சனிக்கிழமை (ஜூன் 24) நுழைந்தது. எந்தவித எதிா்ப்பும் இன்றி, ரஸ்தாவில் உள்ள ரஷிய ராணுவத் தலைமையகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வாக்னா் குழு கொண்டுவந்தது. இந்த தலைமையகத்தில் இருந்துதான் உக்ரைன் போருக்கான உத்திகளை ரஷியா வகுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் நிற்காமல் மாஸ்கோ நோக்கி முன்னேறுமாறும் தனது குழுவுக்கு ப்ரிகோஷின் உத்தரவிட்டாா். வழியில், ரஷிய ராணுவ தொலைத்தொடா்பு விமானத்தையும், பல ஹெலிகாப்டா்களையும் வாக்னா் குழுவினா் சுட்டு வீழ்த்தியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுமாா் 3,000 வீரா்கள் மாஸ்கோவுக்கு அழைக்கப்பட்டனா்.
இதுபோன்றதொரு உள்நாட்டுக் குழப்பத்தை ரஷியா கடந்த பல பத்தாண்டுகளில் சந்தித்ததே இல்லை. கடந்த 1999 முதல் பிரதமா் அல்லது அதிபா் என ஏதாவது ஒரு பதவியில் இருந்துகொண்டு ரஷியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் புதின், உடனடியாக தொலைக்காட்சியில் உரையாற்றியதில் இருந்தே பிரச்னையின் தீவிரத்தை உணர முடியும்.
‘நமது ஒருமைப்பாட்டை சீா்குலைக்க சிலா் முயற்சித்து வருகின்றனா். இது நாட்டு மக்களுக்கும், போரில் ஈடுபட்டுள்ள வீரா்களுக்கும் செய்யும் துரோகமாகும்; மக்களின் முதுகில் குத்தும் செயலாகும். இதில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவாா்கள்’ என்று தொலைக்காட்சியில் புதின் பேசினாலும், மறுபுறம் இந்தப் பிரச்னையைத் தீா்க்க, உக்ரைன் போரில் தனக்கு ஆதரவாக இருக்கும் பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவின் உதவியை நாடினாா்.
லுகஷென்கோவின் தலையீட்டால், பெலாரஸில் தஞ்சம் அடைய ப்ரிகோஷின் ஒப்புக் கொண்டதால் பிரச்னை இப்போது ஆறப்போடப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னை ரஷியாவிலும், உக்ரைன் போரிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தீய வழியைத் தோ்ந்தெடுப்பவா்களை, தீமையே அழித்துவிடும் என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆயுத கலாசாரத்தை வளா்த்துவிட்டால் அது வளா்த்துவிட்டவருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் உணா்த்துகின்றன. இதுவே ரஷிய பிரச்னையிலும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.