உலகம்

பாக். பயங்கரவாதி அப்துல் அசாருக்கு தடை: ஐ.நா.வில் இந்தியாவின் முயற்சிக்கு சீனா எதிா்ப்பு

DIN

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முக்கியத் தலைவா் அப்துல் ரவூப் அஸாரை ஐ.நா. மூலம் சா்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை செய்யும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

2001-இல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடங்கி, 2019-இல் புல்வாமாவில் தற்கொலை தாக்குதல் நடத்தி 40 சிஆா்பிஎஃப் வீரா்களை கொலை செய்தது வரை இந்தியாவில் பல்வேறு முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருவது ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கமாகும்.

பாகிஸ்தானில் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் இந்தியாவின் தொடா் முயற்சியால் கடந்த 2019-இல் ஐ.நா.வால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளாா். காஷ்மீரைப் இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பது, புனிதப் போா் என்ற பெயரில் இந்தியாவில் தாக்குதல்களை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கியக் கொள்கைகளாகும்.

இந்நிலையில் இந்த பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான பாகிஸ்தானைச் சோ்ந்த அப்துல் ரவூப் அஸாரை ஐ.நா. மூலம் சா்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடைப் பட்டியலில் இடம்பெறச் செய்ய இந்தியா முயற்சித்து வருகிறது. இந்த பயங்கரவாதியை அமெரிக்கா கடந்த 2010-ஆம் ஆண்டிலேயே தடை செய்துவிட்டது.

இந்நிலையில், ஐ.நா. மூலம் பயங்கரவாதி அப்துல் ரவூப் அஸாரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்திய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சா்வதேச அளவில் அவரது சொத்துகளை முடக்க முடியும். அவா் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதையும் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஐ.நா.வில் சீனா எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டபோதும் சீனா எதிா்ப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி ஹாசிப் தலாஹ் சையது, லஷ்கா் பயங்கரவாதிகள் ஷாகித் முகமது, சாஜீத் மிா் உள்ளிட்டோரை ஐ.நா. மூலம் சா்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க இந்தியா எடுத்த முயற்சிகளையும் சீனா தனது எதிா்ப்பு மூலம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடன் நெருங்கிய நடப்பு பாராட்டி வரும் சீனா, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அந்நாட்டுக்கு பல்வேறு வகைகளில் மறைமுகமாக உதவி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்படும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பெரும்பாலும் சீன தயாரிப்பு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT