உலகம்

நூற்றுக்கணக்கான மசூதிகளை இடிக்கும் சீனா!

அரசு ஆவணங்களில் உள்ள தரவுகளின்படி நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கலாம் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

DIN

சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகளை அகற்றும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. 

வடக்கு சீனாவைச் சேர்ந்த நிங்ஸியா மற்றும் கன்சு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம் சமூகத்துக்கு சொந்தமான மசூதிகளை மறுசீரமைப்பது அல்லது இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூ யார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் ஆய்வாளர்கள் அளித்துள்ள தரவுகளின்படி, நிங்ஸியா, கன்சு மாகாணங்களில் மசூதிகளின் எண்ணிக்கையை சீன அரசு கணிசமாக குறைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி அமைந்தததைத் தொடர்ந்து, சீனாவின் மத மற்றும் இன ரீதியிலான சிறுபான்மையினர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சீன பாரம்பரியம் அல்லாத சமூகத்துக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை இடித்து அதன் வடிவங்களை மாற்றுவதில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.

முஸ்லீம் மதம் தொடர்பாக இடம் மற்றும் கட்டடங்கள் கட்டப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு நேரடியாக சீன அரசு சார்பில் கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிங்ஸியா பகுதியிலுள்ள இரு கிராமப் பகுதிகளில் செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தியது. இதில், 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், 6 மசூதிகளின் வட்ட வடிவிலான மேற்புறம் அகற்றப்பட்டதும், 4 மசூதிகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டதும், 3 மசூதிகள் முழுவதுமாக இடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

நிங்ஸியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 1,300 மசூதிகள் உள்ளன. சீனாவில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம் மக்கள் வாழ்வது இப்பகுதியில்தான். 2020ஆம் ஆண்டுவரை சீனாவில் பதிவாகியுள்ள மசூதிகளின் எண்ணிக்கையில் மூன்று பங்கு நிங்ஸியாவில் உள்ளன. 

அப்பகுதியில் மறுசீரமைக்கப்பட்ட அல்லது இடிக்கப்பட்ட மசூதிகளின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை என்றும், ஆனால்  அரசு ஆவணங்களில் உள்ள தரவுகளின்படி நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கலாம் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT