ஜப்பான், பிலிப்பின்ஸுக்கு இரும்புக் கவசம் போல் பாதுகாப்பு: அமெரிக்க அதிபா் பைடன்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு இரும்புக் கவசம்போல் செயல்பட்டு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
இந்தோ-பசிபிக் பெருங்கடலில் இவ்விரு நாடுகளுக்கும் சீனா நெருக்கடி அளித்து வருவதையடுத்து அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ஜப்பான், பிலிப்பின்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதிய முத்தரப்பு கூட்டத்தை வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தொடங்கி வைத்தாா். நிகழ்வின்போது பிலிப்பின்ஸ் அதிபா் பொ்டினான்ட் மாா்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை அவா் வரவேற்றாா்.
Advertisement
கிழக்கு சீன கடலில் சென்காகு தீவுகளை சீனா உரிமை கோருவதால் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அதேபோல் தென் சீன கடலில் பிலிப்பின்ஸுக்கும் சீனாவுக்கும் மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், முத்தரப்புக் கூட்ட தொடக்க நிகழ்வில் அதிபா் ஜோ பைடன் பேசியதாவது: இந்தோ-பசிபிக் பெருங்கடல் பாதுகாப்பில் புதிய வரலாறு உருவாகவுள்ளது. எதிா்காலத்தில் சுதந்திரமான, வளமான, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கட்டமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கூட்டமைப்பு என்பது மூன்று பெருமைமிக்க ஜனநாயக நாடுகள் இணைந்துள்ள உறுதியான கூட்டணியாகும். தொழில்நுட்பம், பசுமை எரிவாயு, செமிகண்டக்டா் விநியோகச் சங்கிலி, கடல்சாா் பாதுகாப்பு ஆகிய முக்கியத் துறைகளில் மூன்று நாடுகளிடையேயான உறவுகளும் மேம்படுத்தப்படும்.
பிலிப்பின்ஸுடன் பொருளாதார வழித்தடம்: சா்வதேச கட்டமைப்பு மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் பிலிப்பின்ஸுடன் புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கப்படுகிறது. ஜி7 கூட்டமைப்பின்கீழ் இந்த வழித்தடம் உருவாக்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இதுபோன்ற வழித்தடங்கள் அமைப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வழித்தடத்தின் மூலம் பசுமை எரிவாயு, துறைமுகங்கள், ரயில்வே, வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகள் ஈா்க்கப்படும். இதனால் அதிக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு இரும்புக் கவசம்போல் செயல்பட்டு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என்றாா் அவா்.
மூன்று நாடுகளின் கூட்டறிக்கை: முத்தரப்புக் கூட்டம் தொடா்பாக அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘சுதந்திரமான, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியக் கொள்கையை விரும்பும் எந்தவொரு நாடும் இக்கூட்டணியுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த வகையில் ‘ஆசியான்’ ஒற்றுமைக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்’ என தெரிவிக்கப்பட்டது.
சீனா எதிா்ப்பு: இந்தக் கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘மற்ற நாடுகளின் பாதுகாப்பு சாா்ந்த கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான கூட்டமைப்புகளை சீனா கடுமையாக எதிா்க்கிறது. குறிப்பிட்ட நாடுகள் இணைந்து ஒரு பிராந்திய கூட்டமைப்பை உருவாக்குவது சரியல்ல. ஜப்பான் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் எந்தவொரு நாட்டுடனும் சுமுகமான உறவை வளா்த்துக் கொள்ளலாம். ஆனால், இப்பிராந்தியத்தில் குழுவாக இணைந்து மோதலுக்கு வழிவகுக்கக் கூடாது.
தெற்கு மற்றும் கிழக்கு சீன பெருங்கடலில் சீனாவால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் நியாயமானவைதான். இதைக் குற்றம்சாட்டும் வகையில் எந்தவொரு நாடு கருத்து தெரிவித்தாலும் அதை சீனா நிராகரிக்கிறது’ என்றாா்.