வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்த நாள் முதல் இதுவரை சிறைகளில் இருந்து பயங்கரவாதிகள் உள்பட 1200 கைதிகள் வரை தப்பித்துள்ளதாகவும், அவர்கள் ஆயுதங்களுடன் இந்தியாவிற்குள் வர முயற்சிக்கலாம் என்று வங்கதேச பாதுகாப்பு அமைப்புகள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறையால் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
”பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட்டுள்ளதால் எல்லைகளில் உள்ள மாவட்டங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்த அனைத்து மட்ட அதிகாரிகளும் தகவல் தொடர்பில் ஈடுபட்டு, ஒரு நாளில் பலமுறை பாதுகாப்புக் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மூத்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தகவல் பரிமாற்றத்தில், 4096 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதிகளில் தப்பியோடிய குற்றவாளிகள் தென்பட்டால் உடனடியாக எச்சரிக்குமாறு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் வங்கதேச அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.
எல்லைப்பகுதிகள் பெரும்பாலான இடங்களில் துளைகள் போடப்பட்டுள்ளதால் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தெற்கு மற்றும் வடக்கு வங்கதேசப் பகுதிகளின் எல்லைப் பகுதி மற்ற மாநிலங்களை விட நீளமானது. அந்தத் பகுதிகளில் முள்வேலிகள் மூலம் எல்லை பிரிக்கப்பட்டிருக்கும். மற்ற பகுதிகளில் நீர்நிலைகள் இரு நாடுகளையும் பிரிக்கிறது.
இந்த வழிகள் மூலமாகவே கால்நடைகள், தங்கம், போதைப் பொருள்கள், மருந்துகள், மீன் முட்டைகள் போன்றவை கடத்தப்படுகின்றன.
கடந்த இரு நாள்களில் மட்டும் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டவர்கள் 4 இடங்களில் தனித்தனியே தடுக்கப்பட்டுள்ளனர்.
”வங்கதேசத்தில் உள்ள 5 சிறைகளில் இருந்து கைதிகள் பலரும் தப்பித்ததாக அரசு தெரிவித்துள்ளது. அதனால், இந்திய அரசின் உத்தரவுப்படி யாரையும் தற்போது இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது” என எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் நர்சிங்கி சிறையில் இருந்து தப்பித்த 400 கைதிகள் மீண்டும் சரணடைந்துள்ளதாகவும், மற்ற சிறைக் கைதிகள் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசின் துன்புறுத்தலுக்கு பயந்து பல காவல்துறை அதிகாரிகளும் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“வன்முறை ஏற்பட்டுள்ள வங்கதேசத்தின் நகரப் பகுதிகளில் பல எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பணியில் உள்ளனர். சிறைகளில் இருந்து தப்பிய குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு ஆயுத விற்பனை செய்ய முயற்சிக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். போலீஸார் பலரும் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு தப்பிச் செல்லலாம்” என வங்கதேச அரசு அதிகாரி கூறியதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறினார்.
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு எல்லை பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.