சீனாவில் ஆற்றில் விழுந்த பாலம்; 12 பேர் பலி; 60 பேரை தேடும் பணி தீவிரம்
சீனாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் சரிந்ததில் 12 பேர் பலியாகினர்.
பெய்ஜிங்: வடமேற்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில், ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 60 பேர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தால், மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதில் 31 பேர் காணாமல் போயிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 17 கார்களும் 8 டிரக்குகளும் ஜிங்கியான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஏழு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு, திடீரென கனமழை பெய்ததால், கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, ஷாஸுயி கவுண்டி அருகே அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் இருந்த பகுதியில் நிலச்சரிவு நேரிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 12 பேர் பலியானது சனிக்கிழமை மதியம் வெளியான செய்தியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் 736 வீரர்களும், 76 வாகனங்களும், 18 படகுகளும், 32 டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஸின்சுவா கிராமத்தில் நடந்த மற்றொரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தில் 30 பேரை காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 வீடுகள் சேதமடைந்தன.